இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து சென்றது. ஜூன் 22ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தது. அதன்பின்னர் இங்கிலாந்திலேயே தங்கியுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பயோ பபுள் முறையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சிலர் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கும், மற்ற சில யுரோ கோப்பை கால்பந்து தொடர் ஆகிய விளையாட்டு போட்டிகளை நேரில் காண சென்றனர். இது தொடர்பான படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கு தயாராக மீண்டும் இந்திய அணியின் அனைவரும் 15ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருடன் மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஒருவருக்கும்  மற்றொரு வீரருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 




இவர்களுக்கு கொரோனா பாதிப்பு வர இங்கிலாந்தில் வெளியே அதிகமாக சுற்று வந்ததுதான் காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "இங்கிலாந்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனால் தான் யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் உள்ளிட்ட போட்டிகளுக்கு ரசிர்கள் அனுமதிக்கப்பட்டனர். எப்போதும் எல்லா இடங்களிலும் நீங்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே இருக்க முடியாது. வீரர்களுக்கு அப்போது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது" எனத்  தெரிவித்துள்ளார்.




முன்னதாக  அடுத்த வாரம் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடும் இந்திய அணி நேற்று லண்டனிலிருந்து துர்ஹம் புறப்பட்டு சென்றனர். அதில் ரிஷப் பண்ட்,ஒரு பயிற்சியாளர் உட்பட 5 பேர் இந்திய அணியுடன் செல்லவில்லை. அவர்கள் அனைவரும் லண்டனிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து, "ஒரு வீரர் கடந்த 8 நாட்களுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் வீரர்கள் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று பிசிசிஐ செயலர் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது" என்று சில தகவல்கள் நேற்று வெளியானது.


இந்தச் சூழலில் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலியின் பேட்டி வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாட்டிங்காம் நகரில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:இந்திய கிரிக்கெட் அணியில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி!