இந்தியாவின் தடகள நட்சத்திரம் நீரஜ் சோப்ரா. இவர் பல்வேறு சர்வதேச தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். அந்தவகையில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள டைமெண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். இந்தத் தொடரில் ஏற்கெனவே இவர் இரண்டு முறை பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக வரும் 7ஆம் தேதி தொடரில் பங்கேற்க உள்ளார். இந்தாண்டு அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரம் ஈட்டி ஏறிந்து அசத்தியுள்ளார். இந்தாண்டு இவரை விட அதிகமாக செக் குடியரசின் வெட்லிச் மற்றும் ஆண்டர்சென் பீட்டர்ஸ் வீசியிருந்தனர். அவர்களில் ஆண்டர்சென் பீட்டர்ஸ் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்பதில் சந்தேகமாக உள்ளது.
ஆகவே இந்த முறை நீரஜ் சோப்ராவிற்கு வெட்லிச் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜெர்மனியைச் சேர்ந்த வெப்பரும் இவருக்கு போட்டியாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இம்முறை டைமெண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா நிச்சயம் பதக்கம் வெல்லுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதற்கு முன்பாக நீரஜ் சோப்ரா 2017ஆம் ஆண்டு டைமெண்ட் லீக் தொடரில் இறுதிப்போட்டியில் 83.80 மீட்டர் தூரம் வீசி 7வது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடரில் 85.73 மீட்டர் தூரம் வீசி 4வது இடத்தை பிடித்தார். இந்த முறை நிச்சயம் அவர் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு யூஜீனில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடரில் பங்கேற்று இருந்தார். அந்தத் தொடரில் இவர் இரண்டாம் இடம்பிடித்தார். இவர் லவுசானே டைமெண்ட் லீக் தொடரில் 89.08 மீட்டர் தூரம் வீசி பட்டத்தை வென்றார். இதன்மூலம் டைமெண்ட் லீக் தொடரின் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்திருந்தார்.
இதற்கு முன்பாக டைமெண்ட் லீக் தொடரில் இந்தியாவின் வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். இவர் 2012 நியூயார்க் மற்றும் 2014 தோஹா ஆகிய இரண்டிலும் வட்டு எறிதலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஷாங்காய் மற்றும் யூஜீன் நகரில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடர்களில் கவுடா மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வந்த நீரஜ் சோப்ரா தற்போது முதல் தொடரில் அசத்தியுள்ளார். இந்தப் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா, ”இன்னும் என்னுடைய காயம் சரியாக குணமடையவில்லை. அதனால் நான் சற்று கவனமாக இன்றைய போட்டியில் பங்கேற்று இருந்தேன். அதனால் நான் அதிகமாக தூரம் வீச வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.