திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி வயது (46). இவருடைய கணவர் முருகன் என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் கூலி வேலை செய்து தனது 2 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1-ம் தேதி மாலை மழை பெய்துகொண்டிருக்கும் பொழுது அகாரம் சாலை ஓரமாக நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்பக்கம் வந்த இருச்சக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மூளைச்சாவு அடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து கலைச்செல்வியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க இருப்பதாக அவரின் உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது.


 




 


காலை சுமார் 6.00 மணிக்கு 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் உறுப்புகளை எடுக்கும் அறுவை சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர். சுமார் 11.10 மணிக்கு முதல் கட்டமாக கலைச்செல்வியின் இதயம் வெளியே எடுக்கப்பட்டு அதற்கான பிரத்யேக பெட்டியில் வைக்கப்பட்டது. இதனையடுத்து இதயத்தை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் தயாராக இருந்த நிலையில் சுமார் 11.20 மணிக்கு வேலூர் அடுக்கம்பாறையில் இருந்து சென்னை காவிரி மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம் அடுத்த 4 மணி நேரத்துக்குள் தேவைபடுவோருக்கு பொருத்தி முடிக்க வேண்டும் என்பதால் சுமார் 180க்கும் மேற்பட்ட கிலோ மீட்டரை குறுகிய நேரத்தில் கடக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனால் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் வரை 12 முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல வழிவகை செய்தனர். அதேபோல ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை வரை பாதுகாப்பு வழங்கப்பட்டு சுமார் 1.10 மணிக்கு மருத்துவமனையை சென்றடைந்துள்ளது இதயம். 


 




 


இதனையடுத்து மறுபுறம் வேலூர் மருத்துவமனையில் தொடர்ந்த அறுவை சிகிச்சையில் கலைச்செல்வியின் கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல் ஆகியவையும் எடுக்கப்பட்டு இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும், கண்கள் சென்னை அரவிந்தா கண்மருத்துவமனைக்கும் அனுப்பி தனி தனி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது போன்று மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் இப்பணியை முதல் முறையாக சந்தித்த வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இம்மருத்துவமனை முதல்வர் தலைமையில் சீராக பணியிணை முடித்து முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 5 பேருக்கு மறு வாழ்வு அளித்த கலைச்செல்வியின் உடலுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். செல்வி மாலை அணிவித்து மரியாதை செய்தார்