மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு என 6 நகரங்களில், பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், டெல்லி மைதானத்தில் நடைபெற இருந்த போட்டிகளுக்காக சென்னை அணி கடந்த ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி வந்தடைந்தது.  


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பேருந்து கிளீனர் ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட முடிவுகள் வெளி வந்தன. இதனால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் முந்தைய தினம் சென்னை அணி வீரர்கள் வலைப்பயிற்சியை தவிர்த்துவிட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். மேலும் டெல்லி கிரிக்கெட் சங்க மைதானத்தை சேர்ந்த ஊழியர்கள் 5 பேருக்கு கொரோன தோற்று உறுதி செய்யப்பட்டது.



வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக  இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் சீசன் தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.


நேற்று வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் அணி வீரர்களுடன் உரையாடிய கேப்டன் தோனி, “இந்தியாவில் போட்டிகள் நடைபெற்றதால், முதலில் வெளிநாட்டு வீரர்கள், அணி பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்திய அணி வீரர்கள் வீடுகளுக்கு செல்லலாம். நம் அணி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பிய பின்புதான் நான் ராஞ்சிக்கு செல்வேன்” என தெரிவித்துள்ளார்.



இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில், சிறப்பாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் செல்லும் என ரசிகர்கள் காத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மட்டுமின்று வீரர்களும் கவலையடைந்துள்ளனர்.


எனினும் அனைவரின் பாதுகாப்பு கருதி, வீரர்கள் மற்றும் பயிற்சியார்கள் அனைவரும் வீடு திரும்புவதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இங்கிலாந்து வீரர்களான சாம் கரண், மொயின் அலி ஆகியோர் லண்டன் திரும்பியுள்ளனர்., நேற்று காலை முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.



ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நேரத்தில்தான், தோனியின் தந்தை பான் சிங், தாயாத் தேவதி தேவி ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிக்கபப்ட்டு சிகிச்சைக்கு பின்பு குணமடைந்துள்ளனர்.


இந்நிலையில், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தோனி ராஞ்சி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.