பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு 2021 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் சீசன், தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பான முறையில் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
சிஎஸ்கே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் வீடு திரும்புவதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் அணி வீரர்களுடன் உரையாடிய கேப்டன் தோனி, “இந்தியாவில் போட்டிகள் நடைபெற்றதால், முதலில் வெளிநாட்டு வீரர்கள், அணி பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்திய அணி வீரர்கள் வீடுகளுக்கு செல்லலாம். நம் அணி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பிய பின்புதான் நான் ராஞ்சிக்கு செல்வேன்” என தெரிவித்திருந்தார்.
அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தோனி ராஞ்சிக்கு சென்றிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது தோனி வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு வெளிப்படுவது புதிதல்ல. தோனி – சிஎஸ்கே – யெல்லோ ஆர்மி ரசிகர்களின் அன்பு பிணைப்பை எடுத்துச் சொல்ல ஏராளமான சம்பவங்கள் இருக்கின்றன.
அப்படியான ஒரு தரமான சம்பவம் தான் இது! 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம், தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. ‘No:7 Thala’ என எழுதப்பட்டிருந்த ‘யெல்லோ’ டி-சர்ட்டை அணிந்தபடி தோனி பகிர்ந்த அந்த புகைப்படம், அத்தனை ‘Throwback’ புகைப்படங்களுக்கும் நடுவே சமூக வலைதளத்தில் புயலென ஹிட்டான ‘Comeback’ புகைப்படமானது! இந்த ஒரு சம்பவம்போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும், சிஎஸ்கே ரசிகர்கள் மீதும் தோனி வைத்திருக்கும் அளவுகடந்த அன்பை வெளிப்படுத்த!
சிஎஸ்கே அணி, ஏறுமுகம் இன்றி இறங்குமுகம் கண்ட காலத்திலும் ரசிகர்களின் யெல்லொவ் ஆதரவு தொடர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, 2020 ஐபிஎல் சீசனில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு இந்த சீசனில் சிறப்பான தொடக்கம் இருந்தது. இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்த சென்னை அணிக்கு, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது ஏமாற்றமே!
ஆனால், ஒவ்வொரு சீசனிலும், சென்னை அணி விளையாடும் போட்டிகளில், த்ரில்லான கடைசி பந்து வெற்றி அல்லது தோல்வி இல்லாமல் ஐபிஎல் தொடர் நிறைவு பெறாது. 2021 ஐபிஎல் சீசனிலும், அந்த வழக்கத்தை சென்னை அணி விட்டுவைக்கவில்லை.
ஓர் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புகளும், கொண்டாட்டங்களும், சென்னை – மும்பை அணிகள் மோதும் லீக் போட்டிக்கு இருக்கும். 218 ரன்களை சேஸ் செய்த மும்பை அணி, கடைசி பந்தில் வெற்றியை எட்டியது. ஒரு போட்டிதானே முடிந்தது, இதே சீசனில் மும்பை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ‘பார்த்துக்கலாம்’ என சென்னை ரசிகர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். ஆனால், இந்த சீசனில், மும்பையை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது!
2021 ஐபிஎல் தொடரில் மற்றுமொரு சிறப்பு, மும்பை வான்கடே மைதானத்தில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி விளையாடிய 200வது போட்டியாகும்!
இந்த போட்டியை, 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே. போட்டி முடிந்த பிறகு, மீண்டும் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பி கொண்டிருந்த தோனி, சிஎஸ்கே அணி ஊழியர் கோதண்டத்தை பார்த்து ‘சல்யூட்’ அடிப்பது போன்ற புகைப்படம் வைரலானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களுக்கு, கோதண்டம் பரிச்சயமான முகமாகத்தான் இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஆவணப்படத்தில், இன்ஸ்டாகிராம் வீடியோக்களில், பயிற்சி ஆட்டங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். இவர் சென்னை சூப்பர் கிங்ஸின் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்.
வைரலான அந்த புகைப்படத்தை பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட கோதண்டம், “அணியின் கடைநிலை ஊழியர்களின் மீதும் எப்போதும் அக்கறை கொண்டவர் தோனி. பேட்டிங் கிட் எடுத்துக் கொண்டு கிரவுண்டுக்கு ஓடுவது, வீரர்களுக்கு தேவையான எனர்ஜி டிரின்ங்ஸ் எடுத்துச் செல்வது என எங்களுடைய வேலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். வழக்கமாக, தோனியை பார்த்து நான் ‘சல்யூட்’ அடிப்பது வழக்கம். அவரும் திரும்ப சல்யூட் அடிப்பார். வழக்கம்போல, அன்றைய போட்டி முடிந்தவுடன் டிரெஸ்ஸிங் ரூமிற்கும், கிரவுண்டிற்கும் ஓடி கொண்டிருந்த போதுதான் தோனி எனக்கு திரும்ப சல்யூட் அடித்தார். பொருட்களை எடுத்துக்கொண்டு ‘படிகெட்டுகளில் ஏறி இறங்கும்போது பாதுகாப்பாக இருங்கள்’ என மிகவும் அன்பாக சொல்வார்” என்றார்.
இதே போல மற்றொரு அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்து வந்த அணியைச் சேர்ந்த அரவிந்த். “பயிற்சி போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸின் சமூக வலைதள பக்கங்களில் வீடியோ பதிவிடுவதற்காக ‘ஷூட்’ செய்து கொண்டிருப்போம். ஸ்டம்ப்ஸிற்கு அருகில் நான் நின்று கொண்டிருப்பேன். ஒவ்வொரு நெட் பவுலரும் ஒவ்வொரு ஸ்டைலில் பந்துவீசுவார்கள். அதனால், அனுபவம் இல்லாத நாங்கள், கையில் கேமராவுடன் ஸ்டம்ப்ஸிற்கு பின்னாடி நிற்பது ஆபத்து. ஆனால், ஒவ்வொரு ஓவரின்போதும் தோனி எங்களை வழிநடத்துவார். ‘இங்க நில்லு, பால் வராது, அங்க போ, பாத்து நில்லு’ என வழிநடத்துவார்.” என்றார்.
2021 ஐபிஎல் சீசன் பயிற்சி போட்டிகளின் போதும், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்களின் பாதுகாப்பை தோனி உறுதிப்படுத்திக் கொண்டே இருந்துள்ளார். மற்றவர்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்துவது மட்டுமின்றி தானும் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பான முறையில் பின்பற்றி உள்ளார்.
ஒரு சிறிய இடைவெளியில் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் ஐபிஎல் சீசன் 2021, மாற்று இடத்தில் பாதுகாப்பான முறையில் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.