இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாள் தோறும் பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தினை அடைந்துவருகிறது. குறிப்பாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகா, போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெறாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையினாலும் தினமும் அவதிப்பட்டுவருகின்றனர்.




கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் மட்டுமின்றி உரிய மருந்துகள் உட்கொண்டு வீடுகளிலேயேயும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா நேரத்தில் நுரையீரலுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டுமென்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாகவே உள்ளது. அதற்கான ஒரு தீர்வாக அமைந்துள்ளது மக்கராசனம். மிகவும் எளிய ஆசனமான மக்கராசனத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், ஆக்சிஜன் அளவை சீராக்கி நுரையீரலுக்கு அதிக  பலத்தை தரும் ஆசனம் இதுவென்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


கொரோனா பாதித்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே மக்கராசனத்தை தினமும் செய்யலாம். காலை அல்லது மாலை நேரங்களில் மிகவும் ரிலாக்ஸாக இந்த ஆசனத்தை எளிதாக செய்யலாம். இதனால் உடல், மனம் ஒரு வித ஓய்வை, புத்துணர்ச்சியை பெறுகிறது. நுரையீரல் பலமாகி ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்படுவதால் உடலின் மற்ற உறுப்புகளும் புத்துணர்ச்சி அடைகின்றன. மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. நல்ல ஆழ்ந்த உறக்கம், இதயநோய் வராமல் தடுப்பது, எதிர்மறை எண்ணங்களை அழிப்பது, மனதை ஒருநிலைப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்தல், நுரையீரல் பலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு என என்னற்ற பலன்கள் இந்த மக்கராசனத்தில் உண்டு. உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் மக்கராசனத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.



  • மக்கராசனத்தை காலை அல்லது மாலை நேரங்களில் செய்ய வேண்டும். காலை நேரத்தில் செய்வது சிறப்பானது. காபி அல்லது டீ குடித்தால் 30 நிமிடங்கள் கழித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

  • மக்கராசனம் செய்ய முதலில் நாம் தரையைப் பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். அதாவது குப்புறப்படுத்துக்கொள்ள வேண்டும்.

  • நமது கால்களை இடைவெளி இருக்குமாறு விரித்து வைத்து இரு பாதங்களும் தரையில் படும்படி ரிலாக்ஸாக படுத்துக்கொள்ள வேண்டும்.





  • வலது கையை இடது தோள்பட்டையிலும், இடது கையை வலது தோள்பட்டையிலும் வைத்து தலையை ஒரு பக்கமாக சாய்த்து மிகவும் சாதாரணமாக  கண்களை மூடி ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக்கொண்டு ரிலாக்ஸாக படுத்துக்கொள்ள வேண்டும்.





  • இந்த ஆசனத்தை குறைந்தது 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தின் போது நமது வயிறுப்பகுதி நேரடியாக தரையில் படுகிறது. நமது நெஞ்சுப்பகுதி சற்று தூக்கலாக இருக்கும். இதனால் நுரையீரல் விரிவடைந்து ஆக்சிஜன் அளவு சீராகிறது. இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


 



  • மக்கராசனத்தை மற்றொரு முறையிலும் செய்யலாம்.  குப்புறப்படுத்துக்கொண்டு கால்களை ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். கைமுட்டிகளை  தரையில் ஊன்றி நம் கைகளில் தாடையை வைத்துக்கொண்டு கண்களை மூடி ஆழ்ந்து மூச்சிழுத்து ரிலாக்ஸ் செய்யலாம்.