டென்மார்க் சேர்ந்த மிட் ஃபீல்ட் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி மைதானத்தில் விழுந்த சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப்பென்ஹாகனில் நடைபெற்ற யூரோ கோப்பை இரண்டாவது நாள் போட்டியில் டென்மார்க் அணி தனது முதல் ஆட்டத்தில் பின்லாந்து அணியை எதிர்த்து விளையாடி வந்தது, அப்போது முதல் பாதி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்து, ஏறக்குறைய 40வது நிமிடத்தில் பந்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மயங்கி மைதானத்திலேயே விழுந்தார். முதலில் பந்து அவரின் மீது பட்டதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துவிட்டார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அருகில் சென்ற சக வீரர் ஒருவர் பேச்சு மூச்சின்றி கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் கிடப்பதை கண்டு உடனடியாக மருத்துவ உதவியை அழைத்தார்.
உடனே களத்திற்கு விரைந்த மருத்துவர்கள் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு மைதானத்திலேயே முதலுதவி அளித்தனர். CPR செய்த மருத்துவ குழு, எரிக்சனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கொடுத்தனர். அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.
டென்மார்க் வீரர்கள் அனைவரும் கண்கலங்க மைதானத்தில் நின்ற காட்சி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டியன் எரிக்சன் நலம் பெற வேண்டும் என உலங்கெங்கிலுமிருந்து பிராத்தனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் ஐரோப்பா யூனியன் கால்பந்து கூட்டமைப்பு இந்த போட்டியை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நிலை சீராக இருப்பதாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. நன்றாக சுவாசிக்கிறார், வை திறந்து பேசுகிறார் என கிறிஸ்டியன் தந்தை மருத்துவமனையில் இருந்து அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் விதமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
இரு அணி வீரர்களும் போட்டி ஏற்பாட்டாளர்கள் இடையே கேட்டுக்கொண்டதை அடுத்து, போட்டி மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.