சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதிகளவில் கஞ்சா பயன்பாடு காணப்படுகிறது. இதைத் தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலாங்கரை காவல் நிலையம் பகுதிக்குட்பட்டது கொட்டிவாக்கம். அங்குள்ள கடற்கரை பகுதியில் உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.


அவர்களை நிறுத்திய  போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால், சந்தேம் அடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரின் உடமைகளையும் சோதனை செய்தனர். மேலும், அவர்களது வாகனத்தையும் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதைப்பிரித்து பார்த்தபோது அதில் 1.5 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களின் வாகனங்களையும், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர்.


விசாரணையில், அந்த இளைஞர்கள் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற அஜீத்,21, ஜனிஷ் 21, சந்தோஷ் 25 என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் அவர்கள் கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சி செய்தனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபர்களை கைது செய்த போலீசாரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.