மெக்சிகோவில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப் போட்டி:
மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நேற்று (அக்டோபர் 20)2024ஆம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய ரிகர்வ் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தீபிகா குமாரி.
வில்வித்தை உலகக் கோப்பை இறுதி போட்டியில், தீபிகா குமாரி ரன்னர் அப் ஆவது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார் தீபிகா குமாரி.
சீன வீராங்கனை லி தனது முதல் முயற்சியிலேயே உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வென்றார். முன்னதாக, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்திய வில்வீரர் டோலா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.