Diwali Celebration in Different States of India: இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக தீபாவளி பண்டிகை திகழ்கிறது. தீபாவளி பண்டிகையை மக்கள் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
நரகாசூரனை வதம் செய்த நாளையே தீபத் திருநாளாக தீபாவளியாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒவ்வொரு காரணத்திற்காக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
அயோத்தி திரும்பிய ராமர்:
ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டு காலம் வனவாசம் சென்றிருந்ததை நாம் படித்திருப்போம். அவ்வாறு வனவாசம் சென்ற ராமர் 14 ஆண்டு கால வனவாசத்தை நிறைவு செய்து அயோத்திக்கு மீண்டும் திரும்பியதை வட இந்திய மக்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். சீதையுடனும். லட்சுமணனுடனும் மீண்டும் அயோத்தி திரும்பும் ராமரை வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக வரவேற்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த நாளை தீபாவளியாக வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். இந்த வழக்கம் உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஹரியானா, பீகாரில் உள்ளது. இந்த நாளில் அவர்கள் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த நாளை தாந்தரேஸ் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சீக்கியர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்?
தீபாவளியைப் பண்டிகையை சீக்கியர்கள் கொண்டாடுவதில்லை. ஆனால் வீடுகளில் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். அதற்கு காரணம் தீபாவளி நன்னாளில்தான் அவர்கள் பொற்கோயில் கட்டும் பணியைத் தொடங்கினர் என்பதால் ஆகும். அவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களில் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். பஞ்சாபில் உள்ள குருத்வாராக்கள் வண்ண விளக்குகளால் தீபாவளி நன்னாளில் மிளிர்வது வழக்கம்.
குஜராத்தில் தீபாவளி கொண்டாட்டம்:
இந்தியாவின் முக்கியமான குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி நன்னாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றுகின்றனர். அந்த விளக்கை நெய்யில் ஏற்றுகின்றனர். மறுநாள் காலையில் அந்த விளக்கில் இருந்து வரும் மையை எடுத்து பெண்கள் தங்கள் கண்களுக்கு காஜலாக பூசிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் செழிப்புடன் வாழலாம் என்பது அவர்களின் ஐதீகம் ஆகும். இந்த நன்னாளில் குஜராத்தில் கடைகள் திறப்பது, புதிய தொழில் தொடங்குவது, புதிய சொத்துக்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் காளி பூஜை:
மேற்கு வங்காளத்தில் தீபாவளி பண்டிகையானது காளி பூஜையாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மகா காளி வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் மேற்கு வங்கத்தில் காளி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு தீபாவளி இரவில் நடத்தப்படும் காளி பூஜையால் தங்களது முன்னோர்கள் ஆன்மா சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது அவர்கள் நம்பிக்கையாக உள்ளது.
குஜராத்தில் புத்தாண்டு:
தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு போலவே, குஜராத்திகளுக்கான புத்தாண்டே குஜராத்தில் தீபாவளி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவர்கள் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், புதிய சொத்துக்கள் வாங்குவது, புதிய கடைகள் திறப்பது உள்ளிட்ட சுப காரியங்களை செய்கின்றனர். இந்த நன்னாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர். இதனால், ஆண்டு முழுவதும் மழை வளமும், செல்வச் செழிப்பும் கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.
மகாராஷ்ட்ரா:
தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் மாநிலங்களில் மகாராஷ்ட்ராவே முதன்மையானது ஆகும். அவர்கள் நான்கு நாட்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். முதல் நாள் தாய் மற்றும் குழந்தைகளுக்கு இடையே அன்பை காட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. 2வது நாள் தந்தேராஸ் என்று கொண்டாடப்படுகிறது. 3வது நாள் நரக சதுர்தசியாக கொண்டாடப்படுகிறது. நான்காவது நாள் அவர்களுக்கு முக்கியமான தீபாவளி நாளாகும். தீபாவளி கொண்டாட்டத்தில் அவர்கள் லட்சுமி வழிபாட்டில் ஈடுபட்டு லட்சுமி பூஜை செய்கின்றனர். இதனால், செல்வம் பெருகும் என்பது அவர்கள் நம்பிக்கை ஆகும்.
கர்நாடகாவில் நரக சதுர்ததசி:
கர்நாடகாவைப் பொறுத்தவரை தீபாவளி பண்டிகை 3 நாட்கள் ஆகும். அவர்கள் தீபாவளியை நரக சதுர்ததசி என்று குறிப்பிடுகிறார்கள். தீபாவளிக்கு முந்தைய நாள் அஸ்விஜா கிருஷ்ண சதுர்த்தசி என்றும், தீபாவளிக்கு அடுத்த நாளை பாலிபத்யாமி என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஆந்திராவில் தீபாவளி:
நரகாசுரனை கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா வதம் செய்ததாக ஆந்திர மக்கள் நம்புகின்றனர். இதன் அடிப்படையிலே அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். பாமாவையும், கிருஷ்ணரையும் இந்த நாளில் அவர்கள் சிறப்பு பூஜையுடன் வணங்குகின்றனர்.