தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த சூழலில், ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்ததால் தமிழ்நாடு பெரியளவு மழை பாதிப்பில் இருந்து தப்பித்தது.
அடுத்த 9 நாட்களுக்கு மழை:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 9 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னையில் தினமும் இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இந்த அக்டோபர் மாதத்தில் தற்போது வரை 350 மில்லி மீட்டர் ( 35 செ.மீட்டர்) வரை மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 150 மி.மீட்டர் (15 செ.மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 70 சதவீதம் அதிகம் ஆகும்.
அடுத்த 10 நாட்களுக்கு ( நேற்றைய கணிப்புப்படி) உள் மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும். பெங்களூரிலும் தொடர்ந்து மழை பெய்யும். அக்டோபர் 24-25 ஆகிய தேதிகளில் வரும் புயல் தமிழ்நாட்டை பாதிக்காது. அந்த புயல் ஒடிசாவை நோக்கிச் செல்லும் என்று பதிவிட்டுள்ளார். வெதர்மேன் அளித்த தகவலின்படி அடுத்த 9 நாட்கள் என்பது தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 30ம் தேதி வரை என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் தாக்குமா?
மேலும், இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. “ உள்மாவட்டங்கள், கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளது. இன்று முதல் நாளை காலை வரை இதேபோன்று காற்று உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வீசும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 14.46 செ.மீட்டரும், உடுமலைப்பேட்டையில் 11.8 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது. ஏற்காட்டில் குறைந்தபட்சமாக 4.9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு டானா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு பெரியளவு பாதிப்பு இருக்காது என்றும், ஒடிசாவையே இந்த புயல் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.