டெல்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ரயில்வே இடையிலான ரஞ்சி டிராபி ஆட்டம் மோசமான பிட்ச் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. போட்டி தொடங்கி வெறும் 103 ஓவர்களில் 24 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்த மைதானம் ஆபத்தானது என்றும் விளையாடுவதற்கு தகுதியற்றது என்று தெரிவித்து போட்டி நடுவர்கள் போட்டியை இடைநிறுத்தம் செய்தனர். 


இரண்டு நாட்களில் விழுந்த 24 விக்கெட்டுகளில் 20 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 12 ரன்கள் முன்னிலை பெற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.


இரண்டாவது அமர்வில் ட்ரிங்ஸ் இடைவேளையின் போது, ​​கள நடுவர்கள் கே மதனகோபால் மற்றும் ராஜீவ் கோதாரா ஆகியோர் மேட்ச் ரெஃப்ரி யூராஜ் சிங்குடன் மைதானத்தின் மோசமான பிட்ச் குறித்து விவாதித்தனர், மேலும் பஞ்சாப் கேப்டன் மன்தீப் சிங் மற்றும் ரயில்வே கேப்டன் கர்ண் ஷர்மா ஆகியோரிடமும் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இதுகுறித்து பஞ்சாப் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா தெரிவிக்கையில், “ரஞ்சி தொடரில் இதுபோன்ற ஒரு விக்கெட்டை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. பவுன்ஸ் கணிக்க முடியாத அளவுக்கு ஆடுகளத்தை மிகவும் பாதுகாப்பற்றதாக மாற்றியது. புதிய ஆடுகளத்தில் ஆட்டம் நடைபெறும் என்று கூறி நடுவர்களும் மேட்ச் ரெஃப்ரியும் சரியான முடிவை எடுத்தனர்.” என தெரிவித்தார். 


எலைட் குரூப் டி ஆட்டம் இரண்டு நாள் போட்டியாகக் குறைக்கப்பட்டதால், முடிவு மிகவும் சாத்தியமில்லை, இது ரயில்வே மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் போட்டியின் காலிறுதி வாய்ப்புகளைப் பாதிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


இது முதல்முறை அல்ல.. 


மோசமான பிட்ச் என்று கர்னைல் சிங் ஸ்டேடியம் செய்திகளில் வருவது இது முதல் முறையல்ல. முன்னதாக, பிசிசிஐ 2011 ஆம் ஆண்டில் மோசமான பிட்ச்களின் இந்த மைதானத்தை கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தது.  கடந்த 2012 ஆம் ஆண்டில் பிசிசிஐ இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.