பிரதமர் மோடியை பாஜக தலைவர்கள் புகழ்ந்து பேசுவது ஒன்றும் புதிதல்ல. பாஜக தலைவர்கள் மட்டும் இன்றி உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா போன்றவர்களும் அவரை புகழ்ந்து பேசி இருக்கின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஒரு படிக்கு மேலே சென்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பிரதமர் மோடிதான் தேசத்தந்தை என அவர் குறிப்பிட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வாரம் நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், "பிரதமர் மோடி தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி என்னவாக அழைக்கப்படுவார்" என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை. மோடி புதிய இந்தியாவின் தந்தை. இரண்டு தேச பிதாக்கள் உள்ளனர். ஒருவர் அந்த காலத்தை சேர்ந்தவர். மற்றொருவர் தற்காலத்தை சேர்ந்தவர்" என மராத்தியில் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை அவர் ஒப்பிட்டு பேசுவது இது முதல்முறை அல்ல. பல சமயங்களில், அவர் பிரதமர் மோடியை மற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவர், "சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாமல் உழைக்க நம்மைத் தூண்டும் நமது நாட்டின் தந்தை நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனன பதிவிட்டிருந்தார்.
அம்ருதா பட்னாவிஸ் தெரிவிக்கும் கருத்துகள், அவரின் சமூக வலைதள பதிவுகள் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றன. உட்கட்சி பூசலில் சிவசேனா சிக்கி தவித்து வந்தபோது, அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. "ஒரு காலத்தில் ஒரு பொல்லாத அரசன் இருந்தான்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.
உத்தவ் தாக்கரேவைதான் அவர் மறைமுகமாக பொல்லாத அரசன் என குறிப்பிட்டதாக கூறப்பட்டது. சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவின் கலகத்தை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சிதான் நடந்து வந்தது. ஆனால், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் கலகத்தை ஏற்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைத்து முதலமைச்சரானார்.