அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு தெலுங்கில் ’தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது. 


நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் குமார், எச்.வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோர் மூன்றாவதாக துணிவு மூலம் ஹாட்ரிக் வெற்றியை ரசிகர்களுக்கு தர இருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் புதிய போஸ்டருடன் தெகிம்பு என தெலுங்கு தலைப்பை வெளியிட்டுள்ளனர்.






துணிவு படத்தின் தெலுங்கு பதிப்புக்கு தெகிம்பு என்று பெயரிடப்பட்டு, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெகிம்பு வெளியீட்டு உரிமையை ராதா கிருஷ்ணா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் IVY புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளன.


துணிவு vs வாரிசு 


ஏற்கனவே துணிவு திரைப்படத்திலிருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், தளபதி விஜயின் குடும்ப பொழுதுபோக்கு படமான வாரிசு படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மோத இருக்கின்றன. வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கும் துணிவு படத்திலிருந்து, இதுவரை “சில்லா சில்லா” மற்றும் “காசேதான் கடவுளடா” பாடல்கள் வெளியாகி உள்ளன. இப்பாடல்கள் அஜித் ரசிகர்களிடமிருந்து கலைவையான  விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், போகப் போக செம ஹிட்டாகும் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 






துணிவு ஆல்பம் எப்படி இருக்கு?


இதுவரை வந்த சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரு பாடல்களும் நிறைய பார்வைகளை பெற்றாலும், பட்டிதொட்டியெங்கும் பரவவில்லை. சிலர் இந்த பாடல் நன்றாகதான் இருக்கிறது என்றும் சிலர் இப்போது கேட்க நன்றாக இல்லை, திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் தாய் கிழவி பாடல் போல் கேட்க கேட்க நன்றாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். 


பொங்கலுக்கு ரிலீஸ்:


வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிட்டுள்ளது.