மும்பை-சென்னை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று இரவு துவங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. ருதுராஜ் கெய்வாட்-டுபிளசிஸ் ஜோடி வழக்கம் போல துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்திலேயே அதிரடி காட்ட முயன்ற ருதுராஜ், ஒரு பவுண்டரியுடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, டுபிளசிஸ் ஜோடி மும்பை பந்து வீச்சை பதம் பார்த்தது.

5 சிக்ஸர்களை பறக்கவிட்ட மொயின்அலி, 36 பந்தில் 58 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அவருக்கு இணையாக அதிரடி காட்டிய டுபிளசிஸ், தனது பங்கிற்கு 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 28 பந்தில் 50 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார்.

அதிரடி காட்ட நினைத்த அவர் பொலார்ட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, 4 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த அம்பாதி ராயுடு-ரவீந்தர் ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் அதிரடி காட்டிய அவர்கள் மும்பை பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். ஜடேஜா வாய்ப்பை ஏற்படுத்தி தர, அதை நன்கு பயன்படுத்தி விஸ்வரூபம் எடுத்த அம்பாதி ராய்டு, ருத்ரதாண்டவம் ஆடினார்.

அவரை கட்டுப்படுத்த ரோஹித் சர்மா எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அடுத்தடுத்து பவுலர்களை மாற்றினார். ஆனாலும் அம்பாதி ராயுடு, சிக்ஸர்களை மாறி மாறி பறக்கவிட்டார். ஒரு சிக்ஸர், விளையாட்டு வீரர்களுக்கான குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் கண்ணாடியை உடைத்து, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது.

இறுதியில் 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 27 பந்தில் 72 ரன்கள் குவித்த அம்பாதி ராயுடு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ரவீந்தர் ஜடேஜா 22 பந்தில் 22 ரன்கள் எடுக்க, 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 218 ரன்கள் எடுத்தது.

கடின இழக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு டிகாக் மற்றும் ரோஹித் சர்மா நல்ல துவக்கம் தந்தனர். 28 பந்தில் 38 ரன்கள் எடுத்த டிகாக் , மொயின் அலி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் ஆட்டமிழக்க, கர்ணுல் பாண்டியா-பொலார்டு கூட்டணி ஆட்டத்தை வேறு திசைக்கு மாற்றியது. சென்னை பந்து வீச்சை பதம் பார்த்த போலார்டு, சிக்ஸர் மழை பொழிந்தார்.

23 பந்தில் 32 ரன்கள் எடுத்த கர்ணுல் பாண்டியாஆட்டமிழக்க, பின்னர் பொலார்டு, ஹர்திக் பாண்டிய ஜோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்களை விளாசி தள்ளியது. 2 சிக்ஸர்களுடன் 7 பந்தில் 16 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியா, இன்னொரு சிக்ஸருக்கு பந்தை விரட்டிய போது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின் வந்த நீஷம் ரன் எதுவும் எடுக்காமல் டக் ஆவுட் ஆக, ஒரு கட்டத்தில் 5 பந்துகளுக்கு 16 ரன் என்கிற நிலை ஏற்பட, அடுத்தடுத்து இரண்டு பந்துகளை பொலார்டு பவுண்டரிக்கு விரட்ட, அதில் ஒரு பந்து நோ பால் என்பதால் ப்ரீ ஹிட் கிடைத்தது. ஆனால் அதை பொலார்டு பயன்படுத்தவில்லை.

இறுதியில் 2 பந்துகளுக்கு 8 ரன்கள் என்கிற நிலையில் 19.5வது ஓவரில் சிக்ஸர் அடித்தார் பொலார்டு. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 சிக்ஸர்கள் விளாசிய பொலார்டு, 34 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் தனியாளாக அணியை  வெற்றி பெற செய்தார்.

WHAT. A. WIN for the @mipaltan 🔥🔥

Some serious hitting from @KieronPollard55 ( 87* off 34) as #MumbaiIndians win by 4 wickets.

Scorecard - https://t.co/NQjEDM2zGX #VIVOIPL pic.twitter.com/UAb6SYCMQz
— IndianPremierLeague (@IPL) May 1, 2021

நல்ல ஸ்கோர் எடுத்தும், குறிப்பிட்ட நேரத்தில் விக்கெட்டு எடுக்காமலும், கேட்ச் வாய்ப்புகளை தவறிவிட்டதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.