சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி மறுசீரமைப்பில் இளையான்குடி, கடந்த 2011-ம் ஆண்டு மானாமதுரையுடன் சேர்க்கப்பட்டது. மானாமதுரை தனித் தொகுதியாகும்.  மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி முக்கிய பகுதியாக உள்ளது. மூன்று பேரூராட்சிகளை கொண்ட இந்தத் தொகுதி கடந்த 1952-ல் உருவாக்கப்பட்டபோது, முதன் முறையாக கிருஷ்ணசாமி அய்யங்கார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

போட்டியின்றி ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த பெருமை இந்தத் தொகுதிக்கும், இத்தொகுதியில் ஜனநாயகக் கடமையாற்றும் வாக்காளர்களுக்கும் உண்டு. தாயமங்கலம் முத்துமாரியம்மன், மடப்புரம் காளி கோயில் பிரசித்தி பெற்றது. மாமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர்  இறங்கும் சித்திரை திருவிழாவும் சிறப்பானது. நிலாச்சோறு நிகழ்வு மானாமதுரை பகுதியில் தனித்துவமானது.

கீழடி அகழாய்வுகளுக்கு உட்பட்ட அகரம், மணலூர், கொந்தகை  உள்ளிட்ட அகழாய்வு தளங்கள்  மற்றும் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் உள்ளது இந்த தொகுதிக்கு  சிறப்பு. மானாமதுரையில் மண்பாண்ட தொழில், செங்கல் சூளைகள், போன்ற மண் சார்ந்த தொழில்கள் நடைபெறுவது கூடுதல் சிறப்பு.  மானாமதுரையில் செய்யப்படும் கடம் முன்னணி இசைக்கலைஞர்கள் கையில் பல்வேறு நாடுகளில் தவழ்வது இந்த மண்ணின் பெருமை.



 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதியில் மானாமதுரையும் ஒன்று. அதனால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் தி.மு.க.வைவிட 8,194 ஓட்டுகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ  மாரியப்பன் கென்னடி இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 2016 சட்ட மன்ற தேர்தலில் 8% வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய தி.மு.க 2019 இடைத்தேர்தலில் 4% வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது  குறிப்பிடதக்கது.

 

இதனால் இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க மானாமதுரை தொகுதியை தக்க வைக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ எஸ்.நாகராஜன் அ.தி.மு.க சார்பாக மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் விசுவாசியாக செயல்பட்ட நாகராஜன் பெயர், மணல் கொள்ளையில் அடிபட்டது அவருக்கு மைனஸ். கனிமொழியின் ஆதரவாளராக இருந்துவரும் 

முன்னாள் அமைச்சர் தமிழரசி தி.மு.க சார்பிலும், அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும்,

மக்கள் நீதி மய்யம் வேட்பாளாராக சிவசங்கரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக சத்தியப்பிரியாவும் போட்டியிடுகின்றனர்.

 



மானாமதுரை தொகுதியில் மூன்று முக்கிய கட்சிகளில் இருந்து பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டது கூடுதல் சிறப்பு. இளையான்குடி தொகுதியில் சிறுபான்மையினர், யாதவர்கள் மற்றும் இதர சமூகத்தினர் அதிகமாக இருப்பதால்  அந்த பகுதியில் தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கிறது. திருப்புவனம் ஒன்றியம் அ.தி.மு.க வாக்குகள் அதிகம் எனினும் இந்த முறை வேளாளர் சமூக பெயர் மாற்றத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மானாமதுரையில் கணிசமாக தி.மு.க., அ.தி.மு.க மற்றும் அமமுக என மூன்று கட்சிகளும் வாக்குகளை அள்ளுவார்கள்.

 

தேர்தல் நடைபெறுவதற்கு முன்புவரை தி.மு.க வேட்பாளர் வெற்றி பெருவார் என்ற நிலையில் அ.தி.மு.க சார்பாக வாக்காளர்களுக்கு ‛கவனிப்பு’ அதிகம் இருந்ததால் முடிவுகள் மாறலாம் என பரவலாக பேசப்படுகிறது. மானம் காத்த மானாமதுரை, மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு ஆதரவாக தொடரப்போகிறதா, அல்லது திமுகவிற்கு வாய்ப்பளிக்கப்போகிறதா என்பது நாளை தெரிந்துவிடும்.