கொரோனா தொற்று அச்சுறுத்தலின் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது லீக் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளன. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிந்துள்ளன.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் தகுந்த பாதுகாப்புடன் இந்தத் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.
தொடர் தொடங்குவதற்கு முன்பு சில வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்நேரத்தில், அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு எந்தவித பிரச்னையும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா-பெங்களூரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, சிஇஓ காசி விஸ்வநாதன், பேருந்து கிளீனர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஒட்டுமொத்த சென்னை அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், நாளை நடைபெற இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. கடுமையான பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.

Official Announcement!#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/45mWyu8ySn
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 4, 2021

முன்னதாக, ஐபிஎல் தொடரை வரும் 7ஆம் தேதி முதல் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஏனென்றால் நேற்று டெல்லி கோட்லா மைதானத்தின் ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டெல்லியில் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத்தில் நேற்று கொல்கத்தா அணியில் இருக்கும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு இருந்தும் வீரர்களை மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம் முதல் ஐபிஎல் போட்டிகள் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. இதையும் மாற்றி அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மும்பையில் அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாக தங்க வைக்க ஓட்டல் ஏற்பாடுகள் மற்றும் அங்கு உள்ள மூன்று மைதானங்களில் போட்டியை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஐபிஎல் போட்டிகள் அட்டவணையிலும் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.