செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


கொரோனா முதல் அலையில் இருந்து முன்களப்பணியாளர்களான சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் இரவு, பகல் பாரமல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைப்போலவே பத்திரிகையாளர்களும் வேலை செய்து வருகின்றனர். நாட்டில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இவர்களின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


இந்நிலையில், பத்திரிகையாளர்களும் முன்களப்பணியாளர்களாக கருதப்பட வேண்டும் என கடந்தாண்டு முதலே, பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்த வந்தது. முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதைப் போலவே, தங்களுக்கும் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில், செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.<br><br>முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a >May 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இதுதொடர்பாக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்’ எனப் பதிவிட்டுள்ளார்.


வரும் 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ஊடகவியலாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். செய்தியாளர்கள் அமைப்புகளும் இது தொடர்பான கோரிக்கையை ஸ்டாலினிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.