2021ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. திமுக கூட்டணி 159 இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி 74 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பாரதிய ஜனதா போட்டியிட்ட 20 இடங்களில் 4 வெற்றிபெற்றுள்ளது. கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி இது ‘தேர்தலுக்கான கூட்டணி’ என்றே பதிலளித்து வந்தது.




ஆம், அதிமுகவுக்கு கூட்டணியில் ஒரு கட்சி இருக்கவேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா தேவைப்பட்டது. பாரதிய ஜனதாவுக்கு 2014ல் மத்தியில் ஆட்சி அமைக்க உதவிய அதிமுகவின் ’39/39’ மேஜிக் தேவைப்பட்டது. அதனால்தான் சென்ற இடமெல்லாம் ’இது அம்மா ஆட்சி’ என்றவர்கள் ‘தமிழகத்தில் பாரதிய ஜனதாவும் காங்கிரஸும் எக்காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது’ எனச் சொன்னஜெயலலிதாவின் செயலுக்கு மாறாக,  2021 தேர்தலில் இந்தக் கூட்டணியை அமைத்தார்கள். அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் பெரும் சறுக்கல் என்றாலும் நீண்ட நாட்களாகச் சட்டமன்றத்தை எட்டிப்பார்க்க எத்தனித்து வரும் பாரதிய ஜனதாவுக்கு நான்கு தொகுதிகளில் வெற்றி என்பது அவர்கள் விடாமுயற்சிக்குக் கிடைத்த பலன். 2001ல் திமுக கூட்டணியில் 4 இடங்களில் வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே சட்டமன்றத்துக்குள் நுழைகிறார்கள்.


மேற்கு வங்கமாகுமா தமிழ்நாடு?


பாரதிய ஜனதாவின் இந்த ஒற்றை இலக்க வெற்றியை மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்தத் தேர்தலில்  கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா என்கிற கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா மொத்தம் 6 தொகுதிகளில் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. அதே பாரதிய ஜனதா கட்சி 2021 தேர்தலில் 77 இடங்களில் வென்றிருக்கிறது.  தேர்தல் போட்டி என்கிற அடிப்படையில் திரிணமூல்தான் வெற்றி அடைந்துள்ளது என்றாலும் பாரதிய ஜனதா கட்சியின் ரிப்போர்ட் கார்டை மட்டும் பார்த்தால் இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ’டிஸ்டிங்‌ஷன்’. அங்கே ஒருகாலத்தில் கோலோச்சிய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறது. குறைந்த சீட்களில் வென்றாலும் திரிணமூல் தலைவர் மம்தாவை அவரது சொந்தத் தொகுதியான நந்திகிராமில் தோற்கடித்ததைத் தனது மைல்கல்லாகக் கருதுகிறது அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி.





தமிழ்நாட்டைப் பொருத்தவரை அந்தக் கட்சியின் அறிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கூட முப்பதாயிரத்துக்கும் மேலான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். உதாரணம் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட வினோஜ் செல்வம் (32043 வாக்குகள்), ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட குஷ்பு( 39045 வாக்குகள்). நைனார் நாகேந்திரன் மற்றும் எம்.ஆர்.காந்தியின் வெற்றி முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது.கோவை தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா நுழைவதற்கான நுழைவுவாயில் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் வானதியின் வெற்றி அந்த நுழைவுவாயிலைத் திறந்திருக்கிறது.

அதே சமயம் அதிமுக கூடாரத்திலோ பெருவாரி வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயித்தாலும் பிற அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, சி.வி.சண்முகம்,மாஃபாய் பாண்டியராஜன்,வெல்லமண்டி நடராஜன் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்கள். இவர்கள் தவிர சைதை துரைசாமி, கோகுல இந்திரா, வளர்மதி எனச் சில முக்கிய முகங்களும் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. பல தொகுதிகளில் அதிமுக வாக்குகளை அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து உருவான அமமுக பிரித்திருக்கிறது.





ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலட்சுமி, சி.வி.சண்முகம்,மாஃபாய் பாண்டியராஜன்,வெல்லமண்டி நடராஜன் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்கள். இவர்கள் தவிர சைதை துரைசாமி, கோகுல இந்திரா, வளர்மதி எனச் சில முக்கிய முகங்களும் தோல்வியைத் தழுவி இருக்கின்றன.



அதிமுக-அமமுக இணைந்தால் வெற்றி சாத்தியம்..ஆனால்!

ஒருவேளைத் தன்னை வலுப்படுத்திக்கொள்ள தினகரன் அணியும் அதிமுகவும் இணையுமா? என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு ’குள்ளநரிகளுடன் சிங்கங்கள் கூட்டணி வைக்காது.அதற்கு வாய்ப்பேயில்லை’ என்று வெளிப்படையாகவே பதில் அளித்தார் ஜெயகுமார். அமமுக தலைமையை ஏற்றால்தான் அதிமுகவுடன் கூட்டணி என்றார் தினகரன். எதிர்பார்த்த தாக்கத்தை அமமுக ஏற்படுத்தவில்லை என்பதால், இனி அதிமுக-அமமுக அவசியமாக என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. எம்.ஜி.ஆர்., துவக்கிய அதிமுகவை வைத்து தன்னை வளர்க்கிறதா பாஜக? மேற்கு வங்கம் போல தமிழ்நாட்டிலும் எதிர்கட்சி இடத்திற்கு முன்னேறுகிறதா பாரதிய ஜனதா? தாமரை மலர்வது இரட்டை இலையின் இலையுதிர்காலமா?




திராவிட அரசியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் லட்சுமணன் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார். அவர் கூறுகையில்,’அதிமுகவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையில் பரஸ்பரப் புரிதல் இருக்கிறது. பா.ஜ. நான்கு இடங்களில் வெற்றி பெற்றாலும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வெற்றிபெற பாரதிய ஜனதா கட்சி உதவியிருக்கிறது.மேலும் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான வாக்கு சதவிகித வித்தியாசம் 4.41 சதவிகிதம்தான்.இனிவருங்காலங்களில் பேரவையில் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் நிலையில் அவர்களால் அடுத்த தேர்தலில் இந்த நிலையை மாற்ற முடியும்’ என்றார்.





கூட்டணி என்பது இங்கே பாரதிய ஜனதாவின் நிரந்தரத் தேவை என்கிறார் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, ‘அதிமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அவர்களது இருத்தலும் இருக்கும். ஒருவேளை கூட்டணியில் பெரிய கட்சியின் நிலைப்பாடுகளுடன் முரண்பாடு ஏற்படும்போது அது அதிமுகவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்கிற எண்ணம் அதிமுகவுக்கு இல்லை ஆனால் அது மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதாவுக்கு ஏற்புடையதாக இருக்கும் நிலையில் அதிமுகவின் இருத்தலையும் அது பாதிக்கும்.மேலும் மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா தனியொரு கட்சியாக இருந்து 77 இடங்களை வென்றிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாரதிய ஜனதாவால் கூட்டணி உதவியில்லாமல் மேலோங்க முடியாது.அந்தத் தேவை இருக்கும்வரை இங்கே அதிமுகவும் இருக்கும்’ என்கிறார்.


இரட்டை இலையைக் காப்பாற்ற முரண்பாடுகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டுத் தனது கொள்கைகளை தூசுதட்டி எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.