உலகக்கோப்பை கால்பந்து விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரோஷியா - பிரேசில் இன்று காலிறுதியில் மோதின. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.


எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது. 5 முறை சாம்பியனும் தரவரிசையில் நம்பர் 1 அணியுமான பிரேசில் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள குரோஷியாவை எதிர்கொண்டது. 


முதல் பாதி ஆட்டம் முழுவதும் கோல் எதுவும் இல்லை. இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியது. இன்னும் சொல்லப்போனால் பிரேசிலை விட குரோஷியா வெகு சிறப்பாக ஆடியது.


பிற்பாதியிலும் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. பலம் வாய்ந்த பிரேசில் அணி குரோஷியாவை ஒரு கோல் கூட போட விடவில்லை. ஆட்டம் முழுவதும் குரோஷியா வசமே கால்பந்து இருந்தது.


பிரேசில் முதல் கோல்
இதையடுத்து ஆட்ட நேர முடிவில் கோல் எதுவும் இல்லாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் நெய்மார் லாவகமாக பந்தை கடத்திச் சென்று வலைக்குள் கோலை தள்ளினார்.
இதை சற்றும் எதிர்பாராத குரோஷியா வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






கோல் கீப்பரைத் தாண்டி நெய்மார் அடித்த கோல், அவரை ஆகச் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.


குரோஷியா முதல் கோல்
இதையடுத்து அடுத்த பாதியில் கொஞ்சம் ஸ்லோவாக விளையாடிய பிரேசிலை, சமாளித்து குரோஷியா வீரர் பெட்கோவிச் 116-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.


இதையடுத்து கூடுதல் நேரமான 30 நிமிடம் முடிந்தது. ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
உலகக் கோப்பை தொடரை பொருத்தவரை இரண்டாவது சுற்றிலிருந்து ஒரு அணி வெற்றி பெறும் வரை ஆட்டம் நீட்டிக்கப்படும். அந்த வகையில் கூடுதல் நேரத்திலும் யாரும் கோல் போடவில்லை என்றாலோ அல்லது சமனில் இருந்தாலோ இறுதியில் பெனால்டி வாய்ப்பு வழங்கப்படும்.


அந்த வகையில் இந்த ஆட்டமும் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது. 


பெனால்டி ஷூட் அவுட்


பெனால்டி ஷூட் அவுட்டில் 4 கோல்களை குரோஷியா பதிவு செய்தது. அதேநேரம், பிரேசில் 2 கோல்களை மட்டுமே பதிவு செய்து வெளியேறியது. பிரேசில் வெளியேறிய நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். பிரேசில் வீரர்களும் சோகத்துடன் காணப்பட்டனர்.


குரோஷியா


இரண்டாவது சுற்று ஆட்டத்திலும் குரோஷியா-ஜப்பான் இடையிலான ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது. அதில் குரோஷியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.


இந்த தொடரைப் பொறுத்தமட்டில், குரோஷியா அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் காலிறுதிக்கு முன்னேறியது. ஒரு வெற்றி, இரண்டு டிராக்களுடன் குழு ஆட்டங்களில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா, நாக் அவுட் போட்டியில் ஜப்பான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், காலிறுதியிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி ஆனது.


இன்றிரவு 12.30 மணிக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது. அந்த ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.