விமர்சனங்கள்தான் என்னை வழிநடத்தியது என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் டெஸ்ட் அரங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா vs நியூசிலாந்து இறுதி போட்டியில் சந்திக்கின்றனர்.
இந்த முக்கியமான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே செய்தியாளர்கள் சந்தித்தார், அப்போது ரஹானே பேட்டிங் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு "விமர்சனம் குறித்து பெரிதாக கவலைப்படவில்லை, விமர்சனங்கள்தான் என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
"நான் எப்போதுமே இந்திய அணிக்கு எனது சிறந்த பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன். ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு ஃபீல்டராக சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்" என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக அஜிங்கியா ரஹானே திகழ்கிறார். 17 போட்டிகளில் விளையாடி 1095 ரன்களை குவித்துள்ளார் ரஹானே. அதில் 3 சதம், 6 அரைசதம் ஆகியவை அடங்கும். "நான் எப்போதும் போல் என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதிக அழுத்தத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை, வெற்றி பெறுவதே முக்கியம். 100 ரன்களை அடிப்பதை காட்டிலும் நான் அடிக்கும் 30 அல்லது 40 ரன்கள் இந்திய அணிக்கு பயனளிக்கும் என்றால், அதையே விரும்புகிறேன்" என்று இந்த போட்டியை எவ்வாறு அணுகுகிறேன் என ரஹானே தெரிவித்துள்ளார். மேலும் பேட்ஸ்மேன் ரோல் என்பது மிகவும் முக்கியமானது, இங்கிலாந்தில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் என்று ரஹானே தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில் "ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஒரு கேம் பிளான் வைத்திருப்பார்கள், அதனை சிறப்பாக களத்தில் செயல்படுத்த வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.