தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் மதுபோதையில் விபத்துக்குள்ளாகி அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முழு முடக்கம் அமலாகி இருந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய குறைய அதற்கேற்றார்போல் மாவட்டவாரியாக தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. இந்த நிலையில் தளர்வுகள் அறிவித்த மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னயில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன.



சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிசை வார்டில் தினமும் 30 வழக்குகள் பதிவாகி வந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று 200-க்கும் அதிகமான அறுவை சிகிச்சை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 70% விபத்துகள் மது அருந்தி இருந்ததால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெரும்பாலும் சாலை விபத்துகள் மூலம் நடக்கும் உயிரிழப்புகளுக்கு வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவிக்கும் நிலையில், ஊரடங்கும் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கும் அமலில் இருந்த போது பதிவான விபத்துகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என கூறும் போக்குவரத்து காவல் துறையினர். டாஸ்மாக் கடைகள் திறந்ததால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை மாநகரம் முழுவதும் வாகன சோதனையை பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.



தற்காலிகமாக மூடப்பட்டிந்த சோதனை சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த வாரம் திங்கள் கிழமையன்று நடத்திய சோதனையில் 50-க்கும் அதிமான நபர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிட் 19 தொற்று அபாயம்  உள்ளதால் வாகன ஓட்டிகள் மது அருந்தி உள்ளார்களா என்பதை சோதிக்க குழலை வைத்து ஊதும் நடைமுறையை பின்பற்றவேண்டாம் என பெருநகர காவல் போக்குவரத்து காவலர்களுக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மது அருந்தி உள்ளதை கண்டறிய பயன்படுத்தப்படும் நவீன கருவியை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் அதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அதனை பின்பற்றும் நடவடிக்கைகளை பெருநகர சென்னை போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.