தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை . இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கான உழுதல் நாற்று நடுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர் இந்நிலையில் சென்ற ஜூன் முதல் வாரமான கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்ட முல்லைப் பெரியாற்று பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாயத்திற்கான சாகுபடி செய்தலுக்கு நாத்து நடுதல் போன்ற பணியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளது.



இதன் எதிரொலியாக அணையில் நீர்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் ஆனது 131 அடி அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1724 கன அடியாகவும் , அணையில் மொத்த நீர் இருப்பானது4931 கன அடியாகவும் இருந்து வருகிறது. அணையில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் லோயர்கேம்பில் உள்ள  நீர் மின் நிலையத்தில் முதல் முறையாக ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த நீர்மின் நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வசதியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்




 நீரின் அளவைப்பொறுத்து மின் உற்பத்தி செய்யப்படும். வழக்கமாக  மே மாதத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி இருக்காது. ஆனால் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீர் திறப்பானது 100 கன அடியாக குறைந்த போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னிலையில் தற்போது அணையிலிருந்து நீர் திறப்பானது 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் 1,2 வது ஜெனரேட்டரில் தல 23 வீதம் 46 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.  மழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நீர் திறப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும்.