ZIM vs IND T20I: இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.


இந்தியா - ஜிம்பாப்வே மோதல்:


மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், எதிர்பாராத விதமாக இந்திய அணி அதிர்ச்சி தோல்வியுற்றது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.


மீண்டு வருமா இளம் இந்தியா அணி?


இரு அணிகளும் மோதும் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் சோனி லைவ் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். நேற்றைய வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி இன்று உற்சாகமாக களமிறங்க உள்ளது. அதேநேரம், முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் இன்றைய போட்டியின் மூலம் வெற்றி கணக்கை தொடங்க இளம் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.


பலம், பலவீனங்கள்:


இந்திய அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடர்களில் மட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடிய அனுபவம் இல்லை என்பதை நேற்றைய போட்டி அம்பலப்படுத்தியது. எனவே, இதனை கவனத்தில் கொண்டு, கில், கெய்க்வாட் போன்ற வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.  அதேநேரம், ஜிம்பாப்வே அணி பெரும்பாலான போட்டிகளை கத்துக்குட்டி அணியுடனே விளையாடியுள்ளது. ஆனால், உள்ளூரில் போட்டி நடைபெறுவது அந்த அணிக்கு சாதகமாக உள்ளது. அதோடு, முதல் போட்டியில் குழுவாக செயல்பட்டு வெற்றியை சாத்தியப்படுத்தியது போலவே, இன்றும் செயல்பட்டால் மீண்டும் வெற்றி அவர்களது வசமாகும். 


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 6 முறையும், ஜிம்பாப்வே அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.


மைதானம் எப்படி?


போட்டி நடைபெறும் ஹராரே மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 180-க்கும் அதிகமான ரன்களை சேர்த்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றிக்காக போராடலாம்.


உத்தேச பிளேயிங் லெவன்:


இந்தியா: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது, ரவி பிஷ்னோய்


ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவான்ஷே மருமணி, சிக்கந்தர் ராஜா, ஜொனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, லூக் ஜாங்வே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நக்ராவா