உலக கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்கள் மட்டுமே என்றுமே தனித்துவமானவராக திகழ்பவர்கள். அவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று தனி சகாப்தமாகவே திகழ்கிறார். அவருக்கு இன்று 44வது பிறந்தநாள் ஆகும்.


தோனியை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர்:


இன்றைய 2கே கிட்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பரீட்சயமான தோனி, இந்திய அணிக்காக அட்டகாசமான பல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஒருநாள் போட்டியில் அதிரடியாக எடுத்த 148 ரன்கள்தான் அவரது அதிரடியின் தொடக்கம் ஆகும்.


அந்த வகையில், 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த போட்டித் தொடரின் முடிவில் இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கும் முன் அந்த நாட்டின் அப்போதைய அதிபர் பர்வேஷ் முஷரப் தோனியை பாராட்டியிருப்பார்.


முடி வெட்டாதீங்க:


அவர் பேசியதாவது, “ முதலில் இந்திய அணியை நான் பாராட்டுகிறேன். மிகவும் சிறப்பாக ஆடினீர்கள். குறிப்பாக, தோனியை பாராட்டுகிறேன். இந்த வெற்றியை கட்டமைத்தவராக இருந்தீர்கள். என்னுடைய கருத்து என்னவென்றால், நீங்கள் இந்த ஹேர்ஸ்டைலில்தான் மிக அழகாக இருக்கிறீர்கள். என்னுடைய கருத்து இந்த முடியை நீங்கள் வெட்டாதீர்கள்.”


இவ்வாறு அவர் பேசினார்.


தோனியின் ஹேர்ஸ்டைல்:


தோனியை இன்று ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனுக்கும் ஒவ்வொரு ஹேர்ஸ்டைலில் ரசிகர்கள் பார்க்கிறோம். ஆனால், தோனி இந்திய அணிக்கு அறிமுகமானபோது அவர் நீளமான தலைமுடியுடன் இந்திய அணிக்காக களமிறங்கினார். அவரது அதிரடியான பேட்டிங் மட்டுமின்றி அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைலும் அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற வைத்தது. தோனியின் அந்த ஹேர்ஸ்டைல் மிக மிக பிரபலம். 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு தோனி மொட்டை அடித்து தனது புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


முஷரப் பாராட்டிய அந்த 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கம்பீர் – டிராவிட் தொடக்க வீரராக களமிறங்கினர். கம்பீர் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிராவிட் 50 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த யுவராஜ் – தோனி ஜோடி இந்திய அணியை இலக்கை நோக்கி முன்னோக்கி நகர்த்துவார்கள்.


யுவராஜ்சிங் நிதானமாக தொடங்கி அதிரடிக்கு மாற, தோனியும் அதிரடி காட்ட இந்திய அணி வெற்றியை நோக்கி நகரும். சிறப்பாக ஆடிய யுவராஜ் சதம் அடித்து அசத்தியிருப்பார். அவர் 93 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பார். தோனி 56 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்து அசத்தியிருப்பார்.