இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதன்படி, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் தகுதிச் சுற்று போட்டிகளில் சூப்பர்-10 க்கான மீதமுள்ள 2 இடங்களுக்கு மொத்தமாக இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் உட்பட 10 அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி, ஏற்கனவே உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது. இப்போது மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் 6 அணிகள் வெற்றி பெற்று சூப்பர் சிக்ஸை எட்டின. இதில், ஓமன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதலில் பந்தயத்தில் இருந்து வெளியேறிய நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிரான 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஜிம்பாப்வேயின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு கலைந்தது.
மீதமுள்ள 1 இடத்துக்கான போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஸ்காட்லாந்து ஒருநாள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற வேண்டுமானால், இந்தப் போட்டியில் மட்டும் வெற்றி பெறுவது அவசியம். இதில், ஸ்காட்லாந்து வெற்றிபெற்றால் 8 புள்ளிகள் பெற்று நிகர ரன் ரேட் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு தகுதிபெறும்.
நெதர்லாந்து அணிக்கு வாய்ப்பு உள்ளதா..?
நெதர்லாந்து அணிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான நாளை நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதாவது, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்த பிறகு குறைந்தபட்சம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதேநேரத்தில், இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கை துரத்தும்போது, 44.1 ஓவர்களுக்குள் அந்த அணி வெற்றிபெற வேண்டும். இதில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு சமமாக வரும். அதே சமயம் நிகர ரன் ரேட்டுடன் அந்த அணி நேரடியாக இரண்டாவது இடத்தை அடைந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெறும்.
வெளியேறிய ஜிம்பாப்வே:
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேற்று ஜிம்பாப்வே அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 234 ரன்களை எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 48 ரன்களும், மேத்யூ கிராஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் முறையே 38 மற்றும் 43 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், டெண்டல் சதாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
235 ரன்களை துரத்திய சீன் வில்லியம்ஸ் தலைமையிலான ஜிம்பாப்வே அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. ஜிம்பாப்வே அணிக்காக ரியான் பர்ல் 84 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இது தவிர, சிக்கந்தர் ராசா 40 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்த தோல்வியின் மூலம் ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது.