ஆண்டி ப்ளவர் காலத்தில் உலகின் முன்னணி அணிகளுக்கு சவால் விடும் அளவிற்கு விளையாடிய அணி ஜிம்பாப்வே. சமீப காலமாக அந்த அணி இருக்கும் இடமே தெரியாத அளவில் உள்ளது. இந்த நிலையில், உலககோப்பை டி20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகிறது.


ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் புலவாயோ நகரில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியும், சிங்கப்பூர் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.




இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வினும், சகப்வாவும் அதிரடியாக ஆடினர். இருவரும் இணைந்து 3 ஓவர்களிலே 50 ரன்களை எட்டினர், சகப்வா 12 பந்தில் 4 பவுண்டரியுடன் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் எர்வின் 16 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய மாதவரே 2 ரன்களில் ஆட்டமிழக்க, சீன் வில்லியம்ஸ்- ராசா ஜோடி சேர்ந்தனர்.


இருவரும் இணைந்து சிங்கப்பூர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக, ராசா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். இதனால், ஜிம்பாப்வே ஸ்கோர் மளமளவென எகிறியது. 70 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 173 ரன்னில்தான் பிரிந்தது. சீன் வில்லியம்ஸ் 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார். இருவரும் இணைந்து 103 ரன்கள் குவித்தனர்.





ஆனாலும், ராசாவின் அதிரடி குறையவில்லை. ராசாவின் அதிரடியால் ஜிம்பாப்வே 200 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 222 ரன்களை எட்டியபோது 40 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் வாணவேடிக்கை நிகழ்த்திய 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஜி்ம்பாப்வே 236 ரன்கள் விளாசியது.


237 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணிக்கு தொடக்கமே சொதப்பியது. ரோகன் 1 ரன்னில் வெளியேற, அமன்தேசாய் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். சுரேந்திரன் 21 ரன்களிலும், மன்பிரீத்சிங் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க ஜானக் பிரகாசும், ஆர்யமான் சுனிலும் சிறிது நேரம் ஜோடி சேர்ந்தனர். ஜானக் பிரகாஷ் 32 ரன்களிலும், ஆர்யமான் சுனில் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க சிங்கப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஜிம்பாப்வே அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.


ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற மிகப்பெரிய டி20 வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர்களின் உலககோப்பை தொடருக்கான தகுதி பிரகாசம் ஆகியுள்ளது. சிங்கப்பூர் அணியில் ஆடியவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண