உலககோப்பை டி20 தொடர் இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஐ.சி.சி. தரவரிசையில் உள்ள அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், 2 அணிகளுக்கான தேர்வு மட்டும் தகுதிப் போட்டி மூலம் நடைபெற்றது.


சிங்கப்பூரில் இதற்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்று வந்தது. ஜிம்பாப்வே, சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, நமீபியா, ஹாங்காங், உகாண்டா மற்றும் ஜெர்சி என பல்வேறு அணிகள் மோதின. இதில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் உலககோப்பைக்கு தகுதி பெறும்.




இந்த நிலையில், உலககோப்பைக்கு தகுதி பெறுவதற்கான முதல் அரையிறுதிப்போட்டியில் ஜிம்பாப்வே அணியும், பப்புவா நியூ கினியா அணிகளும் மோதின. இந்த தொடர் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடி வந்த ஜிம்பாப்வே அணி இந்த போட்டியிலும் அதிரடியாகவே ஆடியது. தொடக்க வீரர் சகப்வா 30 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் எர்வினும், மாதவரேவும் அதிரடியாக ஆடினர். கடைசியில் ராசா, சீன் வில்லியம்ஸ், சும்பாவும் அதிரடியாக ஆட அந்த அணி 199 ரன்களை விளாசியது.


200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியாவிற்கு தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், சார்லஸ் அமினி – டோனி உரா ஜோடி அதிரடி காட்டியது. குறிப்பாக, டோனி சிக்ஸர்களாக விளாசினார். இதனால், ஆட்டம் பப்புவா நியூ கினியா பக்கம் போனது. ஆனால், அதிரடி காட்டிய டோனி 15வது ஓவரில் 35 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.




அவருக்கு பின் எந்த வீரரும் சோபிக்காததால் ஜிம்பாப்வே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், உலககோப்பைக்கும் தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில் அமெரிக்காவும், நெதர்லாந்து அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய அமெரிக்காவின் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், மோனங்க் படேல் ஓரளவு ரன்களை சேர்த்தாலும் அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


இதனால், அந்த அணி 10 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து அணி 62 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் பாஸ் டீ லீட் பொறுப்புடன் ஆடினார். அவர் 67 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 91 ரன்கள் விளாசியதால் ஒரு ஓவர்கள் மீதம் வைத்து நெதர்லாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உலககோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண