16 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் இந்திய வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம், யுவராஜ் சிங் டி20 வரலாற்றில் 12 பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் என்ற சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்றுவரை இந்த சாதனை முறியடிக்கப்படாமலே உள்ளது. 


இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது இல்லாமல், உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வழிவகுத்தது. 


இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி, ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் ’சிக்ஸர் கிங்’ யுவராஜ்சிங். இந்திய அணி பல போட்டிகளில் வெற்றிக்காக தத்தளித்தபோது ஒற்றை சிங்கமாக கர்ஜித்து பல்வேறு வெற்றிகளை குவித்து அசையா ஆல்ரவுண்டராக மின்னினார். கடந்த 2007 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. அப்போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் கேப்டனாக விலகுவதாக அறிவித்தார். அப்போது, அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் யுவராஜ்சிங்தான் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தோனி கேப்டனாக்கப்பட்டார். இருப்பினும், யுவராஜ் சிங் சுயநலம் இல்லாது இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்து தந்தார். 


தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய இரண்டு உலகக் கோப்பைகளிலும் யுவராஜ்சிங் அதிரடி மற்றும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றினார். கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களையும், விக்கெட்களையும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி கெத்து காட்டினார்.


இந்தநிலையில், கடந்த 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்ததை யாராலும் மறக்கவே முடியாது. அந்த நாள் எந்த நாள் தெரியுமா? 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளான செப்டம்பர் 19.






இந்தநாளை இன்று நினைவுக்கூர்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் #YuvarajSingh என்ற ஹேஷ்டேக்கை அதிகளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மட்டும் யுவராஜ் சிங் அசைக்க முடியாத 3 சாதனைகளை படைத்தார். அது என்ன..? எப்படி படைக்கப்பட்டது என்ற முழு விவரத்தையும் இங்கே பார்க்கலாம்... 


டி20 வரலாற்றில் அதிவேக அரைசதம்:


இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசிய நாலாபுறமும் அடித்து நொறுக்கிய யுவராஜ் சிங், இதே போட்டியில் அவர் 12 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்மூலம், சர்வதேச டி20 வரலாற்றில் அதிவேக அடிக்கப்பட்ட அரைசதம் இது ஒன்றே ஆகும். 16 ஆண்டுகளாகியும் இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. 


ஒரே ஓவரில் அதிக ரன்கள்:


இந்திய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம், இந்திய அணிக்கு ஒரே ஓவரில் 36 ரன்கள் கிடைத்தது. சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற சாதனையாக பதிவானது. 


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்தியர்:


முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால் சாஸ்திரியின் சாதனை உள்நாட்டு முதல்தர போட்டியில் நடந்தது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை யுவராஜ் சிங் மட்டுமே படைத்துள்ளார்.  மேலும், டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த உலகின் ஒரே வீரர் யுவராஜ் சிங் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.