ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள ஐசிசியின் 13-வது உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனி நாடாக நடத்துகிறது. இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து 1987-ஆம் ஆண்டு மற்றும் 1996-ஆம் ஆண்டும், வங்காள தேசத்துடன் இணைந்து 2011-ஆம் ஆண்டும் இணைந்து தொடரை நடத்தியுள்ளது. உலகக்கோப்பைத் தொடங்கப்பட்ட காலம் முதல் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள 12 உலகக்கோப்பைத் தொடரில் இரண்டு உலகக்கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. இதில் முதல் உலகக்கோப்பையை இந்தியா 1983-ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலும், அதன் பின்னர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை வென்றது. 



 அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை மட்டுமே சென்றது. இதில் இந்திய அணி 2015ஆம் ஆண்டு தோனி தலைமையிலும் 2019ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலும் இந்திய அணி உலகக்கோப்பையை எதிர்க் கொண்டது. கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் இரண்டு முறை ஆசிய கோப்பையையும் வென்ற ரோகித் சர்மா தலைமையில் இம்முறை இந்திய அணி களமிறங்குகிறது. 

 

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் உள்ள நிலையில் விராட் கோலி  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய பலமே ரசிகர்கள்தான். ரசிகர்களின் ஆர்வமும் அசைக்க முடியாத ஆரவாரமும்தான் எங்களுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி இன்னும் கோப்பையை வெல்லாததால் இந்த ஆண்டு கோப்பையை வென்று ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்க முடியும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 




 

அதேபோல் இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா  கூறுகையில், “ நமது பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஊக்கமளிக்கும் விஷயம் எதுவும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார். 

 

இதற்கு முன்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த கம்பீர் இந்திய அணிக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் சில அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார். அதில் அவர், “இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான அனைத்து திறமைகளையும் கொண்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மீது எனக்கு எந்தவிதமான சந்தேகமும் ஒருபோதும் இருந்ததில்லை. அவர் ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ளார். சிலர் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வென்றதில்லை. அடுத்து வரும் 15 நாட்களுக்குப் பின்னர் இந்திய அணிக்கும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் பெரும் சவால் காத்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக பந்து வீச வேண்டும். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றால், அது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.