உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ: இறுதிப்போட்டியில் யுவராஜ்சிங் தலைமையில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றியை கொண்டாடும் விதமாக ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
பிரபல 'Tauba Tauba' பாடலுக்கு நொண்டி, நொண்டி நடந்து நடனமாடுவது போல் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாற்றுத்திறனாளிகளை கிண்டலடிக்கும் விதமாக நடனமாடியதாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் பாரா பேட்மிண்டன் வீரர் மானசி ஜோஷி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வீடியோ வெளியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக அமர் காலனி காவல் நிலையத்தில் அர்மான் அலி என்பவர் புகார் அளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NCPEDP) என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநராக அர்மான் அலி உள்ளார்.
மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்: வீடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற பிறகு சமூக ஊடகங்களில் வெளியிட்ட தௌபா தௌபா வீடியோக்கள் குறித்து புகார் தெரிவிக்கும் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
யாருடைய மனதையும் நாங்கள் புண்படுத்தவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். தொடர்ந்து 15 நாட்களுக்கு கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதை சொல்வதற்காக அந்த வீடியோவை வெளியிட்டோம்.
உடல் முழுவதும் வலியாக இருந்தது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை. நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயவு செய்து இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.