இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் என்று எப்போது வரலாற்றை புரட்டிப் பார்த்தாலும், அதில் தவிர்க்க முடியாத பக்கங்களாக இருப்பவர் யுவராஜ்சிங். ஆல் ரவுண்டர், ஆக்ரோஷக்காரர், சுழலிலும் மிரட்டுபவர், ஃபீல்டிங்கில் அசகாய சூரன் என கிரிக்கெட்டின் அனைத்து பக்கமும் மிரட்டிய அதிரடி மன்னன் யுவராஜ்சிங்கிற்கு 41 வயது ஆகிறது.
கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ரிவஞ்ச் சம்பவங்கள் இருந்தாலும், எப்போதுமே மாஸான ரிவெஞ்ச் சம்பவம் யுவராஜ்சிங்கின் அந்த 6 சிக்ஸர்களாகதான் இருக்கும். இன்றும் எத்தனயோ வீரர்கள் சிக்ஸர்களை விளாசினாலும், ஏன் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினாலும் யுவராஜ் விளாசிய அந்த 6 சிக்ஸருக்கு ஈடு இணை ஆகவே ஆகாது என்பது கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவருக்குமே தெரியும்.
2007ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி முற்றிலும் இளம் படையாக எம்.எஸ்.தோனி தலைமையில் தென்னாப்பிரக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றது. இதில், செப்டம்பர் 19-ந் தேதி டர்பனில் நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோதின.
இதில், முதலில் பேட் செய்த இந்திய அணியின் கம்பீர் 58 ரன்களிலும், சேவாக்கும் 68 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த உத்தப்பா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 18 ஓவர்களில் 171 ரன்களுடன் களத்தில் இருந்தது. அப்போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த யுவராஜ்சிங்கிடம் இங்கிலாந்து வீரர் ப்ளின்டாப் ஏதோ வார்த்தை தகராறில் ஈடுபட்டார். இதனால், கடும் கோபமடைந்த யுவராஜ்சிங் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அவரை சமாதானப்படுத்திய நடுவர் மற்றும் தோனி பேட் செய்ய அழைத்து வந்தனர். ப்ளின்டாப் மீது கடும் கோபத்தில் இருந்த யுவராஜ்சிங் 19வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது, அவர் 6 பந்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அந்த ஓவரை அப்போது இளம் வீரராக இருந்த ஸ்டூவர்ட் பிராட் வீசினார். 133 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த அந்த ஓவரின் முதல் பந்தை இமாலய சிக்ஸருக்கு யுவராஜ்சிங் விளாசினார். அப்போது தொடங்கிய யுவராஜ்சிங்கின் ஆக்ரோஷம் அந்த ஓவர் முழுவதும் தொடர்ந்தது.
எங்கு வீசினாலும் சிக்ஸர் அடிப்பேன் என்ற யுவராஜ்சிங்கை பார்த்த இங்கிலாந்து வீரர்கள் என்ன செய்வதென்று திகைத்தனர். ஹாட்ரிக் சிக்ஸரை கடந்த யுவராஜ்சிங்கை சிக்ஸர் அடிக்காமல் தடுத்தால் மட்டுமே போதும் என்று பிராட் நினைத்து பந்துகளை வீசினார். ஆனால், பிராட் வீசிய பந்துகள் ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே மட்டுமே விழுந்தது. கேப்டன் காலிங்வுட்டின் எந்த ஆலோசனையும் எடுபடாததால், பிராட் வீசிய 6 பந்துகளையுமே சிக்ஸர்களாக விளாசி யுவராஜ்சிங் 6 சிக்ஸர்கள் விளாசி புதிய வரலாறு படைத்தார்.
அந்த ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்களை கடந்ததுடன், யுவராஜ்சிங்கும் 12 பந்துகளில் அரைசதம் விளாசினார். யுவராஜ்சிங் படைத்த இந்த சாதனையை இதுவரை இத்தனை டி20 உலகக்கோப்பையில் எந்த வீரரும் முறியடிக்கவில்லை. அந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, அந்த உலகக்கோப்பையையும் கைப்பற்றியது.
90ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான நாயகனாக உலா வந்த யுவராஜ்சிங் வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்..!