Virat For Ronaldo: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்காக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
கத்தாரில் நடந்துவரும் உலகக்கோப்பை போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் மொரோக்கோவிடம் தோல்வி அடைந்து உலககோப்பையில் இருந்து வெளியேறியது. போர்ச்சுகல் அணி வெளியேற காராணம் அணியின் பயிற்சியாளார் பெர்ணாடஸ், கால் இறுதிப் போட்டியில் முதல் 50 நிமிடங்களில் ரொனால்டோவை உள்நோக்கத்துடன் களம் இறக்கவில்லை. அதன்பின்னர் இறுதி 40 நிமிடங்களில் களமிறக்கப்பட்டார். ஆனாலும் போர்ச்சுகல் தோல்வி அடைந்தது. இதனால் தனது உலகக்கோப்பை கனவு கலைந்து போனதால் மைதானத்திலேயே ரொனால்டோ கதறி அழுதார். இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராட் கோலி ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகர் என்பதை ஒரு தனியார் தொலைக்காட்சிப் பேட்டியில் ஒருமுறை கூறியிருந்தார். கதறி அழுத ரொனால்டோவுக்கு ஆறுதல் வார்த்தைகளை விராட் கோலி, ஒரு ரசிகராகவும், விளையாட்டு வீரராகவும் நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைதளப் பக்கங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரொனால்டோவை டேக் செய்துள்ளார்.
கோல் மிஷினுக்கு நம்பிக்கையூட்டிய ரன் மிஷின்
அதில் அவர் கூறியுள்ளதாவது, “ எந்தவொரு கோப்பையும், டைட்டிலும், நீங்கள் கால்பந்து விளையாட்டுக்காகவும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் செய்ததைப் பறிக்க முடியாது. மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், நீங்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது நானும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலர் என்ன உணர்கிறோம் என்பதையும் வார்த்தைகள் கொண்டு விளக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர், ”கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புடன் ஒவ்வொரு முறையும் தனது இதயத்தில் உணர்வதை வெளிப்படுத்தும் ஒரு மனிதனுக்கும், விளையாட்டு வீரருக்கும் அது எப்போதும் உண்மையான உத்வேகம் அளிக்கும். எனக்கு எல்லா காலத்திலும் தலைசிறந்தவர் நீங்கள்தான்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலியின் இந்த நெகிழ்ச்சி பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.