திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் மறக்கப்பட்டவர்கள் இந்திய அணியில் ஏராளமானோர் ஆவார்கள். இந்த காரணத்திற்காக பி.சி.சி.ஐ.யை ரசிகர்கள் பல முறை விமர்சித்து வருகின்றனர். சமீபகாலமாக இந்திய அணியை பலரும் கடுமையாக விமர்சித்து வருவதற்கு காரணம் சஞ்சு சாம்சனின் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதே ஆகும்.
ஐ.பி.எல். போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக, அதிரடி மன்னனாக வலம் வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் என்பது மட்டும் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. ஆனால், தொடர்ந்து போட்டிகளில் சொதப்பி வரும் ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஷிகர்தவான் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் ஒரு பங்கு கூட சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் திறமையை மதித்து அயர்லாந்து கிரிக்கெட் அணி அவரை தங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இன்றைய கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக கருதப்படுவது அயர்லாந்து. அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டிற்கு குடிபெயர்ந்தால், அயர்லாந்து அணி ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சஞ்சு சாம்சன் இன்னொரு நாட்டிற்காக சென்று விளையாடுவதை ஒருபோதும் தான் சிந்தித்ததில்லை என்று அயர்லாந்து அளித்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சஞ்சு சாம்சன் ஒருவேளை அயர்லாந்து அணிக்காக ஆடச்சென்றால், பி.சி.சி.ஐ.க்கும் அவருக்கும் இடையேயான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதுடன், ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆட முடியாத நிலை ஏற்படும்.
ஐ.பி.எல். போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அபாரமாக ஆடி வரும் சாம்சனுக்கு, கடந்த டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் லெவனில் முறையாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு போட்டியில் கூட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 28 வயதான சாம்சன் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 330 ரன்களும், 16 டி20 போட்டிகளில் ஆடி 296 ரன்களும் எடுத்துள்ளார். ஆனால், மேற்கண்ட போட்டிகளில் அவருக்கு தொடக்க லெவனில் பேட்டிங் வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்பட்டது. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் 138 போட்டிகளில் 3 சதம், 17 அரைசதங்கள் 3 ஆயிரத்து 526 ரன்களை விளாசியுள்ளார்.
இனி வரும் போட்டிகளிலாவது இந்திய அணியில் சாம்சன் போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.