இந்தியா - தென்னாப்பிரிக்கா:


இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.


முன்னதாக, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் டி 20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இச்சூழலில், நேற்று (டிசம்பர் 12) இரண்டாவது டி 20 போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இதில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர், வந்த திலம் வர்மா, ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.


இதில், திலக் வர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸர் என மொத்தம் 29 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்த 56 ரன்களும், ரிங்கு சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 68 ரன்கள் குவித்தார்.


இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில்  திலக் வர்மா, சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பெயருக்காக அல்லாமல் அணிக்காக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.


திலக் வர்மாவை பாராட்டிய காம்பீர்:


இது தொடர்பாக பேசியுள்ள அவர், “பெயருக்காக அல்லது பணத்திற்காக விளையாடாதது போல் இப்போட்டியில் திலக் வர்மா பேட்டிங் செய்தார். இங்கே எத்தனை அணிகள் தொடக்க  வீரர்கள் இருவருமே ரன்கள் எடுக்காத போதிலும் கடைசியில் 180 ரன்களை எடுத்தன?


இந்த போட்டியில் நம்முடைய 3, 4, 5 ஆகிய இடங்களில் விளையாடிய வீரர்கள்  சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். இதை நீங்கள் பயமின்றி பேட்டிங் செய்தால் மட்டுமே சாதிக்க முடியும். அந்த மன நிலை இருந்தால்  தான் உங்களால் பந்தை மட்டும் பார்த்து அடிக்க முடியும்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், ”அனுபவத்துடன் பயமின்றி விளையாடக்கூடிய இளம் வீரர்களை கொண்ட அணி தான் உண்மையிலேயே நல்ல அணியாகும். ஒருவேளை நீங்கள் , திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை கொடுத்தால் இதே போன்ற டெம்ப்ளேட்டில் விளையாட முடியும்” என்று கூறினார் கெளதம் காம்பீர்.


மேலும் படிக்க: Arjuna Award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!


 


மேலும் படிக்க: Rinku Singh: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டி... மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்! விவரம் உள்ளே!