உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் உள்நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டி 20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. 


இதனையடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, 3 டி 20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி 20 அணி நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.


முன்னதாக, முதல் போட்டி மழையின் காரணமாக நடத்தப்படவில்லை. இதனிடையே இன்னும் ஒரு டி 20 போட்டி மட்டுமே உள்ள சூழலில் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருக்கிறது இந்திய அணி. 


அதிரடி காட்டிய ரிங்கு சிங்:


முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வீரர் ரிங்கு சிங்கு அதிரடியாக விளையாடினார். தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சர்வதேச டி 20 போட்டிகளில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதன்படி 39 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களை குவித்தார். இதனிடயே, தென்னாப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்கம் வீசிய 19 வது ஓவரில் டைசி பந்தில் நேராக அவர் அடித்த சிக்சர் மைதானத்தின் கண்ணாடிகளை நொறுக்கியது. இது தொடர்பான வீடியோக்களும் நேற்று வெளியாகி வைரலானது. 


மன்னித்து விடுங்கள்:


இந்நிலையில், தன்னுடைய சிக்ஸரால் மைதானத்தில் இருந்த கண்ணாடி உடைந்ததற்கு மைதான பராமரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாக நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரிங்கு சிங்.







இது தொடர்பாக பேசியுள்ள ரிங்கு சிங், “நான் அந்த ஷாட்டை சிக்ஸராக அடித்த போது அது கண்ணாடியை உடைக்கும் என்பது எனக்கு தெரியாது. இப்போது தான் அது எனக்கு தெரிய வந்தது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


இப்போட்டியில் ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது நான் பேட்டிங் செய்ய சென்ற சூழ்நிலை கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் சூர்யா பாய் உனக்கு வரக்கூடிய இயற்கையான ஆட்டத்தை விளையாடு என்று என்னிடம் சொன்னார்.


அதனால் நான் சற்று மெதுவாக விளையாடினேன். ஆனால் ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு சூழ்நிலைகளை உணர்ந்த பின் பெரிய ஷாட்டுகளை அடிப்பதற்கான வாய்ப்புகள் எனக்கு வந்தது"  என்று கூறியுள்ளார் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்.


 


மேலும் படிக்க: AUS vs PAK: காசாவுக்கு ஆதரவாக ஷூவில் வாசகம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா!


 


மேலும் படிக்க: Rohit Sharma: ’ரசிகர்களின் அன்புக்கு நன்றி; இனி நடக்கப்போவது இதுதான்’ - மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா!