விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


 


உலகக் கோப்பையில் கலக்கிய ஷமி:


ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் இந்த முறை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 


முன்னதாக, இந்த உலகக் கோப்பை தொடரில் கவனிக்கத் தக்க வீரராக இருந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 



33 வயதான முகமது ஷமி இந்த முறை இந்திய அணிக்காக மொத்தம் 6 போட்டிகளில் விளையாடினார். இந்த போட்டிகளில் அபாரமாக பந்து வீச்சை வெளிப்படுத்தி எதிரணி வீரர்களை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அதன்படி, 5.26  என்ற சராசரியில் மொத்தம் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் முகமது ஷமி. அதேபோல், இந்திய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சதனையையும் படைத்தார். 


அர்ஜூன விருதுக்கு பரிந்துரை:


இச்சூழலில், அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



இந்தியாவில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, அந்தந்த விளையாட்டு அமைப்புகள் பரிந்துரைக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளில் பட்டியலை மத்திய தேர்வு குழு இறுதி செய்து விருதுக்கான பட்டியலை வெளியிடும். இச்சூழலில் தான் இந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருது உள்ளிட்ட இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்காக, விளையாட்டு அமைச்சகத்தால் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தன்ராஜ் பிள்ளை, கமலேஷ் மேத்தா, அகில் குமார், ஷூமா ஷிரூர், அஞ்சும் சோப்ரா, திரிப்தி முர்குண்டே மற்றும் ஃபர்மான் பாஷா உட்பட ஆறு முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவிற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமை தாங்குவார். இந்த மதிப்புமிக்க விருதுகளை பெறுபவர்களை தீர்மானிப்பதில் குழு முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: AUS vs PAK: காசாவுக்கு ஆதரவாக ஷூவில் வாசகம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா!


 


மேலும் படிக்க: Rohit Sharma: ’ரசிகர்களின் அன்புக்கு நன்றி; இனி நடக்கப்போவது இதுதான்’ - மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா!