Year Ender 2021: வாஷிங்டன் சுந்தர் To ஸ்ரேயாஸ் ஐயர்- 2021-ஆம் ஆண்டில் அசத்திய அறிமுக வீரர்கள் !

இந்தாண்டு தற்போது வரை இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்கள் யார் யார்?. 

Continues below advertisement

2021-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. எப்போதும் வருட கடைசி வந்தால் அந்த ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான சம்பவங்களை நாம் திரும்பி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தற்போது வரை இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்கள் யார் யார்?. 

Continues below advertisement

  1. வாஷிங்டன் சுந்தர்:


இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஆண்டே இடம்பெற்று இருந்தார். எனினும் டெஸ்ட் போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை. இந்தாண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பெயின் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்கினார். இந்தப் போட்டியில் பேட்டிங்கில் 62 ரன்களும், பந்துவீச்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.  

  1. நடராஜன்:


இந்திய கிரிக்கெட் அணியில் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தமிழ்நாடு வீரர் நடராஜன் அறிமுகமானார். டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரிஸ்பெயினில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் இவர் 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 

  1. அக்‌ஷர் பட்டேல்:


பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதில் 2-வது டெஸ்ட் போட்டியில் அக்‌ஷர் பட்டேல் அறிமுக வீரராக இந்திய அணியில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 

  1. சூர்யகுமார் யாதவ்:



ஜூலை மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு சென்றதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் அணி இலங்கை சென்றது. அந்த அணியில் பல வீரர்கள் இந்தியாவிற்காக அறிமுகமாகினர். அதில் கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் 31 ரன்கள் அடித்திருந்தார். 

  1. இஷான் கிஷண்:


இலங்கை தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகிய வீரர்கள் இஷான் கிஷனும் ஒருவர். இவர் கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். தன்னுடைய அறிமுக ஒருநாள் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். 

  1. ராகுல் சாஹர்:


இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராகுல் சாஹர் அறிமுக வீரராக களமிறங்கினார். இவர் ஏற்கெனவே 2019-ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமாகி விளையாடி வந்தார். இலங்கையில் தன்னுடைய அறிமுக ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி ராகுல் சாஹர் அசத்தினார். 

  1. வருண் சக்ரவர்த்தி:


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு தேர்வாகியிருந்தார். எனினும் அப்போது காயம் காரணமாக அவர் களமிறங்கவில்லை. இதைத் தொடர்ந்து இலங்கை தொடரில் முதல் டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி களமிறங்கினார். இதில் 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியிருந்தார். 

  1. ருதுராஜ் கெய்க்வாட்:


2020-ஆம் ஆண்டு யுஏஇயில்  நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடித்தார். அதில் 2-ஆவது டி20 போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தொடக்க ஆட்டக்கரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்கள் எடுத்தார். 

 

  1. வெங்கடேஷ் ஐயர்:

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் யுஏஇயில் நடைபெற்ற 7 போட்டிகளிலும் இவர் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அதைவைத்து இந்திய அணியில் இடம்பிடித்தார். 

  1. ஸ்ரேயாஸ் ஐயர்:


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக கான்பூர் டெஸ்ட்டில் களமிறங்கினார். அந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் இன்றைய இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 170 ரன்களுடன் அவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு முன்பாக ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக போட்டியில் 177 ரன்கள் அடித்து இப்பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஷிகார் தவான் உள்ளார். அவர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 187 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க: 2021-ஆம் ஆண்டில் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த 7 ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள்..

Continues below advertisement