Top Cricket Records 2023: நடப்பாண்டில் கிரிக்கெட் உலகில் புதியதாக படைக்கப்பட்ட மற்றும் முறியடிக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


சர்வதேச கிரிக்கெட்:


நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும். 12 மாத இடைவெளியிலேயே 3 ஐசிசி கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெற, வீரர்கள் தங்களது அபார திறமைகள் மூலம் ரசிகர்களை திக்குமுக்காட செய்தனர். இதன் விளைவாக ஏராளமான வீரர்கள் பல சாதனைகளை முறியடித்து, சாதனை புத்தகங்களில் தங்கள் பெயர்களை பொறித்துக்கொண்டனர். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் முறியடிக்கப்பட்ட சிறந்த சாதனைகளைப் பார்ப்போம்.


T20I வரலாற்றில் அதிவேக அரைசதம்:


நேபாள வீரர் டிபேந்திர சிங் ஐரி, இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து டி20யில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். மங்கோலியாவுக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெறும் 9 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். இந்த இன்னிங்ஸில் அவர் எட்டு சிக்ஸர்களை விளாசினார்.


T20I வரலாற்றில் அதிவேக சதம்:


ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவிற்கு எதிரான போட்டியில், நேபாளத்தின் குஷால் மல்லா 34 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக தலா 35 பந்துகளில் சதம் விளாசிய  டேவிட் மில்லர் மற்றும் ரோகித் சர்மாவின் கூட்டு சாதனையை முறியடித்து, டி20 போட்டியில் அதிகவேக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை குஷால் மல்லா பெற்றார்.


அதிக T20I ஸ்கோர் மற்றும் அதிக வெற்றி வித்தியாசம்:


ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 இன் தொடக்கப் போட்டியில் நேபாள வீரர்,  குஷால் மல்லாவின் (50 பந்தில் 137), ரோஹித் பவுடலின் (27 பந்துகளில் 61) மற்றும் திபேந்திர சிங் ஐரியின் (52* பந்தில் 10) இன்னிங்ஸால், நேபாளம் அணி 20 ஓவர்களில் 314/3 என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றது. இது டி20 வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். மேலும் மங்கோலியாவை வெறும் 41 ரன்களுக்கு சுருட்டி 273 ரன்கள் வித்தியாசத்தில் அதிகபட்ச வெற்றி வித்தியாசத்தை பதிவு செய்தது.


ODI வரலாற்றில் அதிக சதங்கள்:


2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது 50 வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய சச்சினின் சாதனை முறியடிக்கப்பட்டது.


டி20யில் பிரமாண்ட சேஸ்:


2023 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 259 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக துரத்தியதால், தென்னாப்பிரிக்கா T20Iல் புதிய சாதனை படைத்தது. செர்பியாவிற்கு எதிராக பல்கேரியா சேஸ் செய்த 246 ரன்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது.


ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி:


ஜனவரி 15, 2023 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி  73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா,  2008இல் அயர்லாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தின் பெற்ற சாதனை வெற்றியை பின்னுக்கு தள்ளியது.


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:


இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 2023 ஆம் ஆண்டு முழுவதுமே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐசிசி உலகக் கோப்பை தொடரில் டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது, ​​சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போது ​​இந்திய கேப்டன் 484 இன்னிங்ஸ்களில் 582 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


T20Iகளில் சிறந்த பந்துவீச்சு:


ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தின் போது, ​​மலேசியாவின் சியாஸ்த்ருல் இட்ரஸ் டி20 வரலாற்றில் பந்துவீச்சில் புதிய சாதனை படைத்தார். சீனாவின் கேப்டன் வாங் குய் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய,  வலது கை வேகப்பந்து வீச்சாளரான இட்ரஸ் நான்கு ஓவர்களில் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம்,  நைஜீரியாவின் பீட்டர் அஹோவின் 6/5 என்ற சாதனையை இட்ரஸ் முறியடித்தார்.


T20Iகளில் குறைந்த ஸ்கோர்:


பிப்ரவரி 26, 2023 அன்று கார்டஜீனாவில் ஐல் ஆஃப் மேன் மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான தொடரின் ஆறாவது T20Iயின் போது, ​​ஸ்பெயின் 8.4 ஓவர்களில் 10 ரன்களுக்கு ஐல் ஆஃப் மேனைச் சுருட்டியது. இது டி20 வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். தொடர்ந்து ஸ்பெயின் அணி வெறும் இரண்டு பந்துகளிலேயே இலக்கை எட்டி, பந்துகள் அடிப்படையில் டி-20 வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை ஸ்பெயின் அணி பதிவு செய்தது.


மகளிர் டெஸ்டில் பிரமாண்ட வெற்றி:


அண்மையில் நவி மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில்,  இந்திய பெண்கள் 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ரி பெற்றது. இது மகளிர் டெஸ்டில் ரன்கள் அடிப்படையில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக பதிவானது.  1998 இல் பாகிஸ்தானை 309 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கையின் சாதனை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டது.