சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியாக உள்ளது நேபாளம். அந்த அணியின் நட்சத்திர வீரராக கருதப்படுபவர் சந்தீப் லாமிச்சானே. தனித்துவமான சுழற்பந்து வீச்சால் எதிர் அணிக்கு பெரும் சவாலாக இருந்து வந்தார். உலகம் முழுவதும் நடைபெற்று வந்த உள்நாட்டு டி20 போட்டிகளில் கலக்கியவர்.


பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு:


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற சிபிஎல் தொடரிலும் விளையாடியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அறிமுகமானதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடிய நேபாளத்தைச் சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.


ஒரு நாள் போட்டியில் குறைந்த ஆட்டங்களில் விளையாடி 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 50 டி20 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


இச்சூழலில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் சிறுமி ஒருவரை, இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். ஜனவரி மாதம் நேபாள நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


சந்தீப் லாமிச்சானேவை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்:


இந்த நிலையில், சந்தீப் லாமிச்சானேவை குற்றவாளியாக அறிவித்துள்ளது காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணை, கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரு தரப்பு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.  
பாலியல் வன்கொடுமை வழக்கில் லாமிச்சானேவை குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்டவர் மைனர் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணையில், எவ்வளவு சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட உள்ளது.


பதான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துருவராஜ் நந்தா மற்றும் ரமேஷ் தக்கல் ஆகியோர் அடங்கிய அமர்வு, லாமிச்சானை 2 மில்லியன் ரூபாய் ஜாமீனில் முன்னதாக விடுவித்திருந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.


கடந்த பிப்ரவரி மாதம், நேபாளத்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்து லாமிச்சானேவிடம் கைகுலுக்க மறுத்துவிட்டனர். கடைசியாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கென்யாவுக்கு எதிரான டி20 போட்டியில் லாமிச்சானே விளையாடினார்.


இதையும் படிக்க: 2ஆவது இன்னிங்ஸ்! அரசியலில் அடித்து ஆடும் ஒலிம்பிக் நாயகன் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்!