நடப்பு ஆண்டு அதாவது 2023 கிட்டத்தட்ட இன்னும் 20 நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த ஆண்டு கிரிக்கெட்டில் எந்த வீரருக்கு சிறப்பானதாக இருந்ததோ, இல்லையோ இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கு சிறப்பானதாகவே இருந்தது. கில் இந்த ஆண்டில் மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1584 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இது தவிர, 2023ல் அதிக ஒருநாள் போட்டிகளில் ரன் குவித்த டாப்-3 பேட்ஸ்மேன்களைப் பார்த்தால், மூவரும் இந்திய வீரர்களாகவே உள்ளனர். சுப்மன் கில் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், விராட் கோலி இரண்டாவது இடத்தையும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 


இந்த பட்டியலில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் நான்காவது இடத்திலும், இலங்கையின் பாத்தும் நிஸ்ஸங்க ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் எட்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் மற்றும் கேஎல் ராகுல் கூட்டாக ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். இருப்பினும், மார்கரத்தை விட கே.எல்.ராகுல் அதிக போட்டிகளில் விளையாடியதால் பத்தாவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.


இந்தாண்டு டாப் 3 - இந்திய வீரர்களின் செயல்திறன் எப்படி..? 


நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சுப்மன் கில், 29 போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் 63.36 என்ற சிறந்த சராசரியுடன் 1584 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது 5 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை அடித்துள்ளார், அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 208 ஆகும். இதற்கிடையில், கில் ஒரு முறை மட்டுமே ரன் ஏதுமின்றி டக் அவுட்டில் வெளியேறியுள்ளார். 


இதற்குப் பிறகு, இரண்டாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி, இந்த ஆண்டு 27 ஒருநாள் போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 72.47 சராசரியில் 1377 ரன்கள் எடுத்துள்ளார். இந்த 24 இன்னிங்ஸ்களில் கோலி 6 சதங்கள் மற்றும் 8 அரை சதங்களை அடித்துள்ளார். அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 166* ரன்கள். 


மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 27 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் 52.29 சராசரியுடன் 1255 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில், இந்திய கேப்டனின் பேட்டிங்கில் இருந்து 2 சதங்களும், 9 அரைசதங்களும் அடிக்கப்பட்டுள்ளது. . மூன்று இந்திய பேட்ஸ்மேன்களில், ரோஹித் சர்மா மட்டுமே அதிகபட்சமாக 67 சிக்ஸர்களை அடித்துள்ளார். 


ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் உள்ளிட்ட மூன்று இந்திய பேட்ஸ்மேன்களும் இந்த ஆண்டு இனி எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாட மாட்டார்கள். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது, இதில் மூன்று பேட்ஸ்மேன்களும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 


2023 ஒருநாள் போட்டியில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த முதல் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியல்: 



  • சுப்மன் கில்- 1584 (29 போட்டிகள்) 

  • விராட் கோலி - 1377 (27 போட்டிகள்) 

  • ரோஹித் சர்மா- 1255 (27 போட்டிகள்) 

  • டேரில் மிட்செல்- 1204 (26 போட்டிகள்) 

  • பதும் நிஸ்ஸங்க- 1151 (29 போட்டிகள்)

  • பாபர் அசாம்- 1065 (25 போட்டிகள்) 

  • முகமது ரிஸ்வான்- 1023 (25 போட்டிகள்)

  • டேவிட் மாலன்- 995 (18 போட்டிகள்)

  • ஐடன் மார்க்ரம்- 983 (21 போட்டிகள்)

  • கேஎல் ராகுல்- 983 (24 போட்டிகள்)