ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 


இந்தநிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) டர்பனில் நடைபெறவிருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னதாக அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. 


கடுமையாக சாடிய கவாஸ்கர்:


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நினைத்திருந்தால் இந்த போட்டி நடந்திருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெறவிருந்த டர்பன் மைதானது மழை பெய்தபோது வெறும் பிட்ச் மற்றும் 30 யார்ட் சர்க்கிள் மட்டுமே தார்பாயால் மூடப்பட்டிருந்தது. இப்படியான சூழ்நிலை இருந்தால், போட்டி கைவிடப்பட வேண்டிய சூழல்தான் ஏற்படும். 


கிரிக்கெட் போட்டிகளால் ஒவ்வொரு கிரிக்கெட் சங்கங்களும் அதிக வருவாயை ஈட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். டர்பன் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பால்க வந்த மழை சற்று நேரத்திற்குப் பிறகு நின்று விட்டது. அப்போது உடனடியாக போட்டியை துவக்க முடியாத அளவுக்கு வெளிப்புற களங்கள் ஈரமாக இருந்தது. அதற்கு காரணம் தார்ப்பாய் மைதானம் முழுவதும் போடப்படவில்லை. அதை மைதான பராமரிப்பாளர்கள் உலர்த்திக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் மழை வந்ததால் போட்டியை ரத்து செய்வதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். தார்ப்பாய் இல்லாததால் மழை இல்லாத நேரத்திலும் ஓவர்கள் குறைத்து கூட விளையாட முடியவில்லை.


உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் நிறைய பணத்தை வைத்துள்ளன. எனவே இது போன்ற தவறை செய்யாதீர்கள். உண்மையாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களிடமும் நிறைய பணம் இருக்கிறது. ஒருவேளை இல்லை என்று சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். பிசிசிஐ அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு மைதானத்தை மொத்தமாக தார்ப்பாய் கொண்டு மூடும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லாமல் இல்லை. 


கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போதுகூட இங்கிலாந்து  மைதானத்தை முழுமையாக மூடாததன் காரணமாக, ஏராளமான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அதனால் பல்வேறு அணிகளும் புள்ளிகளை இழக்க நேரிட்டது. அந்த புள்ளிகளை இழந்த அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒரு அணிதான். 


ஒருமுறை கொல்கத்தாவில் இதேபோல மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த போட்டியிலேயே மொத்த மைதானத்தையும் கவர் செய்யும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படுத்தி கொடுத்தார். அதன்பிறகு, ஒருமுறை கூட இந்த மாதிரியான தவறுகள் நடக்கவில்லை. ஆசிய கோப்பையின்போது கூட இலங்கை கிரிக்கெட் வாரியம் மழையால் போட்டி ரத்து செய்யப்படாமல் இருக்க மைதானத்தை கவர் செய்து சிறப்பாக செயல்பட்டது.” என்று தெரிவித்தார்.