2021-ல் இந்திய கிரிக்கெட் அணி பல ஏற்ற இறக்கங்களை, எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொண்டிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை வெற்றிகரமாகவே இருந்திருக்கிறது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி இருந்தாலும், காபாவில் வென்ற போட்டி முதல் செஞ்சூரியினில் வென்ற போட்டி வரை என இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை கடந்த ஆண்டு பதிவு செய்திருக்கிறது.


2021-ல் இந்திய அணி பதிவு செய்த சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிகளை திரும்பிப் பார்ப்போம். கடந்த ஆண்டு இந்திய அணி விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில், 8 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகள் டிராவிலும் முடிந்திருக்கிறது.


62 ஆண்டுகளுக்கு பிறகு காபாவில் வெற்றி


1947-ம் ஆண்டில் இருந்து 7 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் விளையாடி இருக்கிறது. இதில், 5 போட்டிக்ளில் தோல்வியையும், 1 போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு பிறகு காபா மண்ணில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.



ஆஸ்திரேலியாவை பொருத்தவரை, தோல்வியில் ரெக்கார்டு செய்திருக்கிறது. 1988-ம் ஆண்டு காபாவில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவிய பிறகு 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது. விராட் கோலி, அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி, வரலாறு படைத்தது மறக்க முடியாத டெஸ்ட் கிரிக்கெட் சம்பவங்களில் ஒன்றானது!


50 ஆண்டுகளுக்கு பிறகு ஓவல் மைதானத்தில் வெற்றி


1971-ம் ஆண்டு கேப்டன் அஜிட் வடேகர் தலைமையில்தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதனை அடுத்து, இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. அதுமட்டுமின்றி, ஒரே ஆண்டில் ஓவல் மைதானத்தில் இரண்டு போட்டிகளையும் வென்றிருக்கிறது. 


7 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்



கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 12 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 4 போட்டிகளில் டிராவில் முடிந்துள்ளன. 3 முறை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதில், இந்த ஆண்டு பெற்ற வெற்றி மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸில் வெற்றி பெற்று இந்திய அணியின் கொடி ஏற்றப்பட்டது. 1986, 2014, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. 


11 ஆண்டுகளுக்கு பிறகு செஞ்சூரியனில் வெற்றி


டிசம்பர் மாதம், செஞ்சூரியனில் பெற்ற மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 2018ஆம் ஆண்டு ஜோகனிஸ்பேர்கில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் தற்போது 2021-22 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் செஞ்சுரியன் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக ரத்தானது. அப்படி இருக்கும் போது வெறும் 4 நாட்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


முதன் முதலாக, 2010-ம் ஆண்டு செஞ்சூரியனில் இந்திய அணி விளையாடியது. அதனை அடுத்து 2018-ம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, இந்த ஆண்டு வெற்றி கண்டது. இதனால், 11 ஆண்டுகள் காத்திருந்து செஞ்சூரியனில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண