தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்கப்பட்ட தகவலை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா அறிவித்தார்.


வீடியோ வழியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், அணி விவரங்களை வெளியிட்ட பின்பு விராட் கோலியின் டி20 கேப்டன்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “டி20 கேப்டன்சி பதவியில் இருந்து விலக வேண்டுமென்பது விராட் கோலியின் முடிவு. அவரது முடிவை நாங்கள் பரிசீலிக்க சொன்னோம். அவர் பதவி விலகியதும், வைட்-பால் கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன்தான் இருக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தெளிவாக இருந்தது. இது குறித்து முடிவு எடுக்கப்பட்டவுடன் கோலிக்கு தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சில கேள்விகள் இருந்தது. அதை பற்றி பேசி முடித்த பின்பு அவர் ஒப்புக்கொண்டார். இந்திய அணி தேர்வாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையே தெளிவான பேச்சுவார்த்தை இருக்கும், குழப்பம் இருக்காது.


கேப்டன்சி குறித்த முடிவுகள் என்றாலும், ப்ளேயிங் லெவனை தேர்வு செய்யும் முடிவாக இருந்தாலும் அது மிகவும் சவாலான வேலை. சவாலாக இருந்தாலும் முடிவை எட்டிதான் ஆக வேண்டும். கோலி இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். தொடர்ந்து இந்திய அணிக்காக அவர் விளையாட வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.






தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் கிளம்பும் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோலி, “நான் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கிறேன் என்ற என்னுடைய முடிவை அறிவித்தபோது பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. என்னுடைய முடிவை மாற்றச்சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்த முடிவு சரியானதுதான் என பிசிசிஐ தெரிவித்தது” என போட்டு உடைத்தார். 


ஆனால், கோலியின் கருத்துகளும், பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துகளும் ஒத்துப்போகவில்லை . கோலி டி20 கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி கங்குலி பேசும்போது, “டி20 கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அவர் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை” என தெரிவித்திருந்தார்.



கோலி, கங்குலியின் கருத்துகள் வேறுபட்டிருப்பதால், கிரிக்கெட் வட்டாரமும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே குழப்பத்தில் இருந்த இந்த விவகாரத்தில், இப்போது கங்குலி சொன்னதற்கு ஆதரவாக சேத்தன் ஷர்மா பேசி இருப்பது சர்ச்சையை அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண