இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று  ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் விளையாட வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து சாதனை பட்டியலில் இடம் பிடித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.387 பந்துகளை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 171 ரன்கள் அடித்து அசத்தினார். 


பல்வேறு சாதனைகளை முறியடித்த ஜெய்ஸ்வால்




1. சர்வதேச போட்டியில் சாதனை


அறிமுக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த 17 வது இந்திய வீரர் என்ற பெருமையுடன் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியிலே தனது முதல் சதத்தை அடித்த மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். முதலாவதாக ஷிகர் தவான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 187 ரன்கள் எடுத்தார். அவரை தொடந்து பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் எதிராக 134 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து மூன்றாவதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


2. அறிமுக போட்டியிலேயே 39 ஆண்டுகால சாதனை முறியடிப்பு


  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளை எதிர்கொண்டு 171 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். இதற்கு முன்னர் முகமது அசாருதீன் 1984 ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிராக  ஆட்டத்தில் 322 பந்துகளை எதிர்கொண்டு 110 ரன்கள் எடுத்தார். 39 வருடமாக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.


3. 27 ஆண்டு கால சாதனையும் முறியடித்த ஜெய்ஸ்வால் 


வெளிநாட்டு மண்ணில் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு லண்டன் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 131 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இந்த சாதனையையும் 27 ஆண்டுகளுக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  171 ரன்கள் எடுத்து முறியடித்தார்.