பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும் ஐசிசி உலகக்கோப்பை போன்ற மிகவும் பிரமாண்டமான தொடருக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பாதது, பாகிஸ்தான் மக்கள் ஆவலுடன் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காணமுடியாத சூழல் ஏற்படும் எனக் கூறியுள்ளார். 


கிரிக்கெட் உலகில் எல்-கிளாசியோ போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் மோதல்தான், அப்படி இருக்கும்போது,  "இரு நாடுகளுக்கு இடையே மற்ற விளையாட்டுகளில் தொடர்புகள் இருக்கும்போது, ​​கிரிக்கெட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. கிரிக்கெட்டை ஏன் அரசியலுக்குள் இணைக்க வேண்டும்? தங்கள் அணிகள் ஒருவருக்கொருவர் விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பை மக்கள் இழப்பது நியாயமற்றது" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் கூறினார். 


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐக்கு தெரிவித்தது என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது பாகிஸ்தான் அரசின் அனுமதிக்கு உட்பட்டது என்பதுதான். 


அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியா தனது ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது, மேலும் பல மாதங்களாக ஆசிய அளவிலான  போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாமல் இருந்தது.  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


பிசிபியின் செயல் தலைவர் ஜகா அஷ்ரஃப் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் உலகக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடங்களில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 


இதனை சுட்டிக்காட்டி மிஸ்பா பேசுகையில், பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லவேண்டிய நேரம் என்றும், இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு போட்டிகளில் விளையாட வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 


"நிச்சயமாக பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டும்” என்று அவர் கூறினார். 


அதேபோல், "நான் இந்தியாவில் பலமுறை விளையாடியபோது, ​​நாங்கள் அங்குள்ள அழுத்தத்தையும் கூட்ட நெரிசலையும் அனுபவித்திருக்கிறோம். அது உங்களுக்கு உத்வேகத்தையும், இந்தியாவில் எங்களுக்கு ஏற்ற சூழ்நிலையையும் தருகிறது. இந்திய சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்படும் திறன் எங்கள் அணிக்கு உள்ளது” எனவும் போட்டி மற்றும் உலகக் கோப்பையை வெல்வதில் மட்டும் கவனம் செலுத்துமாறு வீரர்களுக்கு மிஸ்பா அறிவுறுத்தினார். அதேபோல் அஃப்ரிடியும் பாகிஸ்தான் அணி உலககோப்பையில் விளையாட இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்