Continues below advertisement

 

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரான பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரில் சொதப்பிய இவர்கள் இருவரும் முதல் இன்னிங்சில் சொதப்பியதால், இரண்டாவது இன்னிங்சில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆட்டம் தொடங்கியது முதலே நிதானமாகவும் அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு சவால் அளித்தார்.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை எடுத்து நீண்ட  காலமாகிய நிலையில், நேற்று இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் 100 ரன்களை கடந்தனர். இருவரும் இணைந்து நேற்று 172 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்தனர். இந்த நிலையில், இருவரும் இணைந்து இன்றைய ஆட்டத்தை தொடங்கினர்.

சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் இன்று சதம் விளாசினார். மறுமுனையில் நங்கூரமிட்ட கே.எல்.ராகுலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த பார்ட்னர்ஷிப் 200 ரன்களை கடந்தது. ஆனால், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் 176 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்தார். அப்போது இந்திய அணி 201 ரன்களை எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு எதிராக இந்திய ஜோடி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவே ஆகும். இதற்கு முன்பு 1986ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 191 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதன்மூலம் 38 ஆண்டுகால சாதனையை இன்று கே.எல்.ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடி முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் ( முதல் விக்கெட்டிற்கு)

  • ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் – 201 ரன்கள் (2024)
  • கவாஸ்கர் – ஸ்ரீகாந்த் – 191 ரன்கள் (1986)
  • சேத்தன் சவுகான் – கவாஸ்கர் – 165 ரன்கள் (1981)
  • ஆகாஷ் சோப்ரா – சேவாக் - 141 ரன்கள் (2003)
  • முல்வந்திரி மன்கட் – சர்வாடே – 124 ரன்கள் ( 1948)

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப்பாக தற்போது வரை சச்சின் – லட்சுமணன் ஜோடி திகழ்கின்றனர். அவர்கள் 353 ரன்களை குவித்துள்ளனர்.

இந்த போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் இடதுகை தொடக்க வீரர் ஆவார்.