ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது இந்தியா. இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் அபாரமாக தொடக்கம் அளித்தனர்.
ஜெய்ஸ்வால் சதம்:
இருவரும் இணைந்து நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 172 ரன்களுக்கு இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சை முடித்தனர். ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் நிதானமான தொடக்கம் அளித்தனர். நேற்று 90 ரன்களுடன் களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ஜெய்ஸ்வால் ஹேசில்வுட் பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
உலகின் அபாயகரமான மற்றும் அதிவேகமான மைதானங்களில் ஒன்றாக பெர்த் மைதானமும் ஒன்றாகும். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்த இந்திய அணியின் வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மிரட்டும் ஜெய்ஸ்வால்:
ஆஸ்திரேலிய தொடர் தொடங்கும் முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிதும் கவனித்ததது ஜெய்ஸ்வால் ஆட்டத்தையே ஆகும். அவரது விக்கெட் மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கூறினர். இந்த நிலையில், முதல் இன்னிங்சில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக ஆடி சதம் விளாசியுள்ளார். முன்னணி பந்துவீச்சாளர்களான ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், லயன் ஆகியோரை சமாளித்து சிறப்பாக ஆடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலே அவர்களது சொந்த மண்ணிலே ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் தங்களது கிரிக்கெட் வாழ்வின் இறுதிகட்டத்தில் இருக்கும் சூழலில் இளம் வீரர்கள் அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் புதிய நட்சத்திரமாக சமீபகாலமாக உருவெடுத்துள்ள ஜெய்ஸ்வால் டெஸ்ட், டி20 என அனைத்து வடிவ போட்டிகளிலும் அசத்தி வருகிறார்.
22 வயதான ஜெய்ஸ்வால் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 இரட்டை சதம், 4 சதங்கள், 8 அரைசதங்களுடன் 1524 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 214 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர 23 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதங்களுடன் 723 ரன்கள் எடுத்துள்ளார். 52 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 சதம், 9 அரைசதங்களுடன் 1607 ரன்கள் எடுத்துள்ளார்.