WTC 2025 Points Table Updated: நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற பிறகும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்தியா தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:

அதேநேரம்,  இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற மீதமுள்ள ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தை 153 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

நிலை அணி போட்டி வெற்றி தோல்வி டிரா புள்ளிகள் வெற்றி சதவிகிதம்
1 இந்தியா 12 8 3 1 98 68.06
2 ஆஸ்திரேலியா 12 8 3 1 90 62.5
3 இலங்கை 9 5 4 0 60 55.56
4 நியூசிலாந்து 9 4 5 0 48 44.44
5 இங்கிலாந்து 18 9 8 1 93 43.06
6 தென்னாப்பிரிக்கா 6 2 3 1 28 38.89
7 பங்களாதேஷ் 8 3 5 0 33 34.38
8 பாகிஸ்தான் 9 3 6 0 28 25.93
9 வெஸ்ட் இண்டீஸ் 9 1 6 2 20 18.52

இந்திய அணி படுதோல்வி:

பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க டெஸ்டில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி தொடர்ந்து மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை நோக்கிய இந்திய அணியின் பயணத்தை சிறிது கடினமாக்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், அணியின் வெற்றி சதவிகித புள்ளிகள் பெங்களூரு டெஸ்ட்டின் தோல்வி காரணமாக 74.24 இலிருந்து 68.06 ஆகக் குறைந்துள்ளன.

மறுபுறம், நியூசிலாந்து, 1988 க்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா இப்போது இந்த WTC சுழற்சியில் 12 டெஸ்டில் விளையாடி எட்டு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் ஒரு டிராவையும் பெற்றுள்ளது.  அதே நேரத்தில் நியூசிலாந்து ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளைப் பெற்றுள்ளது. அவர்களின் சதவீத புள்ளிகள் 44.4% ஆகவும், மொத்த புள்ளிகள் 48 புள்ளிகள் ஆகவும் உள்ளது.

WTC இறுதிப் போட்டியில் இந்தியா தனது இடத்தை உறுதிப்படுத்த மீதமுள்ள ஏழு போட்டிகளில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். 62.50 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளையும், ஒரு டிராவுடன் மூன்று தோல்விகளையும் பெற்றுள்ளது. அவர்கள் 90 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவுடன் ஒப்பிடும்போது எட்டு புள்ளிகள் பின்தங்கி உள்ளனர்.