இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட்::
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில், முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று அக்டோபர் 20 நடைபெறுகிறது. முதலில் மழையால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் மழை நின்றதை தொடர்ந்து ஆட்டம் துவங்கியது. அதாவது 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தங்களது ஆட்டத்தை தொடங்கியது.
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பும்ரா:
அந்த வகையில் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை இந்திய அணியின் சார்பில் வீசினார் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் வீசிய முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முதல் ஓவரில் நியூசிலாந்து அணி வீரர் டாம் லாதம் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்திய அணியை பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்களையும் விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஐந்தாம் நாள் அன்று அதிக நேரம் மழை பெய்தால் போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அளவுக்கு மழை இருக்காது என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்து அணி மழைக்கு முன் போட்டியை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் உள்ளது. மறுபுறம் இந்திய அணி முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி உள்ளது. மழையால் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 10.15 முதல் 12.30 வரை முதல் பகுதி ஆட்டம் நடைபெறும்.
பின்னர் 12.30 முதல் 01.10 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். பின்னர் 01.10 முதல் 03.10 வரை இரண்டாம் பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் 20 நிமிடம் தேநீர் இடைவேளை விடப்படும். 03.30 முதல் 05.15 வரை மூன்றாவது மற்றும் கடைசி பகுதி ஆட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.